» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 8 மாதத்தில் லாரி ஓட்டுநர் விபத்தில் பலி! கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!!

திங்கள் 8, ஜூன் 2026 8:03:04 AM (IST)

தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், திருமணமான எட்டே மாதங்களில் லாரி ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள குலசேகரநல்லூர் கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை ஆண்டி. இவரது மகன் சுடலைமணி (30). லாரி ஓட்டுநரான இவருக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுடலைமணி தனது மோட்டார் சைக்கிளில் புதூர்பாண்டியாபுரத்திலிருந்து பண்டாரம்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டிற்குச் செல்வதற்காகத் தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

ஜோதி நகர் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு முன்னால் சென்ற தண்ணீர் லாரி, அங்குள்ள ஒரு குடோன் கட்டுமானப் பணிக்காகத் தண்ணீரை இறக்குவதற்காக பைபாஸ் சாலையிலிருந்து திடீரெனத் திரும்ப முற்பட்டு பிரேக் போட்டுள்ளது. இதனால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சுடலைமணி, கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்கள் போராட்டம்:

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரியின் ஓட்டுநர், காரியத்தைச் சாதகமாக்கிக் கொண்டு லாரியை வேகமாக ஓட்டிச் சென்று, பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோன் பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். விபத்து குறித்துத் தகவல் அறிந்த பண்டாரம்பட்டி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த இடத்தில் திரண்டனர். 

விபத்திற்கு முழுப் பொறுப்பேற்று லாரி ஓட்டுநர் மற்றும் சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் சாலையில் அமர்ந்து அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆய்வாளர் மாரிச்செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்வதாகக் காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

தப்பியோடிய ஓட்டுநர் கைது 

அதன் பின்னர், சுடலைமணியின் உடலைக் காவல்துறையினர் முறைப்படி கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

அதில், விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரியை ஓட்டிச் சென்றவர் பிரையண்ட் நகரைச் சேர்ந்த ராமர் மகன் லிங்கதுரை (42) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரைச் சிப்காட் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory