» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பை வண்டியில் விழுந்த 5 பவுன் தங்கச் செயின் மீட்பு : தூய்மைப் பணியாளர்களுக்கு மேயர் பாராட்டு!

வெள்ளி 5, ஜூன் 2026 8:04:56 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாகக் கொட்டப்பட்ட 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார். 

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த முத்துமாலை என்ற மூதாட்டி, தனது பகுதியில் தினமும் காலையில் வழக்கம் போல் வரும் மாநகராட்சி லோடு ஆட்டோ குப்பை வண்டியில் வீட்டுப் பயன்படுத்தப்பட்ட கழிவுகளைக் கொட்டியுள்ளார். குப்பையைக் கொட்டி முடித்த சில நிமிடங்களில், தனது இடுப்பில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அந்தப் பணப்பையின் உள்ளே 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.மழைக்காலக் கழிவுகளோடு சேர்த்து மணிபர்ஸையும் தவறுதலாகக் குப்பை வண்டியிலேயே கொட்டியிருக்கலாம் எனச் சந்தேகமடைந்த மூதாட்டி, உடனடியாகக் கதிர்வேல்நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நுண் உர மையத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விபரத்தைக் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக அண்ணாநகர் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் இன்னும் உர மையத்தில் கொட்டப்படாமல் அப்படியே வண்டியிலேயே இருந்தது. மூதாட்டியின் பதற்றமான வேண்டுகோளை அடுத்து, குப்பை வாகன ஓட்டுநர் இசக்கிராஜா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முனீஸ்வரி, ராணி, பொன்செல்வி ஆகியோர் வண்டியில் இருந்த குப்பைகளை ஒரு தார்பாயில் பாதுகாப்பாகக் கொட்டித் தேடத் தொடங்கினர்.

அப்போது, மூதாட்டி வீசியிருந்த வாழை இலைக் கழிவுகளுக்கு மத்தியில் 5 பவுன் தங்க நகையுடன் இருந்த மணிபர்ஸ் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தூய்மைப் பணியாளர்கள் மூதாட்டி முத்துமாலையிடம் நேர்மையுடன் ஒப்படைத்தனர். நகையைத் திரும்பப் பெற்ற மூதாட்டி கண்ணீர் மல்கத் தூய்மைப் பணியாளர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தூய்மைப் பணியாளர்களின் இந்த அசைக்க முடியாத நேர்மையைப் பாராட்டும் விதமாக, ஐந்து பணியாளர்களையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துத் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் சால்வை அணிவித்து, தங்களது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகையினை வழங்கிப் பாராட்டினர்.

அப்போது பேசிய மேயர் மற்றும் ஆணையர், "மாநகராட்சிக்கு மாபெரும் பெருமையைத் தேடித்தந்த உங்களது நேர்மையைப் பாராட்டுகிறோம். தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ்கிறீர்கள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். 

இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் கணேஷ், பகுதி சுகாதார ஆய்வாளர் சந்தனகுமார், ரவீந்திரன், பிரபாகர் ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உட்படப் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

பாராட்டும்Jun 5, 2026 - 09:27:20 AM | Posted IP 162.1*****

நாங்கள் திருடுவோம் 🤣🤣🤣🤣

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory