» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாட்டு இறைச்சி வியாபாரிக்குச் சரமாரி அரிவாள் வெட்டு; நகை பறிப்பு - தூத்துக்குடியில் துணிகரம்!

வியாழன் 4, ஜூன் 2026 10:24:41 AM (IST)



தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரியை வழிமறித்து, அரிவாளால் கொடூரமாகத் தாக்கிய 3 மர்ம நபர்கள், அவரிடமிருந்த தங்க மோதிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஹரி பாலகிருஷ்ணன் (50). இவர் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் ஜிம்காணா கிளப் எதிரே சொந்தமாக மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். மேலும், தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். 

நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவு 11.00 மணியளவில் ஹரி பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கணேஷ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 இளைஞர்கள் முகவரி கேட்பது போல் நடித்து அவரை வழிமறித்துள்ளனர்.

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்களில் இரண்டு பேர் தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரி பாலகிருஷ்ணனின் தலையின் பின்பகுதி மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினர். இந்தத் திடீர் கொலைவெறித் தாக்குதலில் அவர் அலறியபோது, மர்ம நபர்கள் அவரது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துள்ளனர். 

ஹரி பாலகிருஷ்ணனின் சத்தத்தைக் கேட்டுப் பொதுமக்கள் ஓடி வருவதற்குள், அந்த 3 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அப்பகுதியினர், உடனடியாக அவசரச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி, குற்றவாளிகளின் அடையாளங்களைச் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகத் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஐக்கிய வியாபாரிகள் சங்கம் கடும் எச்சரிக்கை:

இச்சம்பவத்திற்குத் தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்த வழிப்பறி மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளைக் காவல்துறை உடனடியாகக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வியாபாரிகளைத் திரட்டித் தொடர் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும் என ஐக்கிய வியாபாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory