» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை - மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:51:41 PM (IST)

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 போலீசாரும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விதிமுறைகளை மீறியதாகக் கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது போலீசார் நடத்திய தாக்குதலில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரைக் கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
சிறையில் இருக்கும் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர். அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர்களை நியமித்து விடுவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது முதல் குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், மேல்முறையீட்டு மனுவைத் தயார் செய்ய 15 நாட்கள் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "சிறையில் மனுத் தயார் செய்யப் போதிய வசதிகள் உள்ளன, எனவே விடுப்பு தேவையில்லை" என்று திட்டவட்டமாகக் கூறினர். மேலும், சிபிஐ மேல்முறையீட்டு மனுவின் நகலை அவர்களுக்கு வழங்கப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தமிழகம் முழுவதும் உற்றுநோக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜூன் 1-ஆம் தேதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 4-ஆம் தேதி முதல் இந்த வழக்கின் மீதான தினசரி விசாரணை நடைபெற்றுத் தீர்ப்பளிக்கப்படும். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:26:03 PM (IST)

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும் : தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஏற்பாடு
வியாழன் 30, ஏப்ரல் 2026 11:51:36 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:50:57 AM (IST)









