» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வியாழன் 30, ஏப்ரல் 2026 10:50:57 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 30) காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் - முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப் பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர். 


தொடர்ந்து திரளான பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய' மற்றும் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என முழக்கமிட்டு வடம்பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. 

தேருக்கு முன்பாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் நடந்தது. 



விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், கோவில் இணை ஆணையர் ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்மணி, சுப்பிரமணிய சுவாமி மகமை அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டு ராஜா, கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி மற்றும் செந்தில்குமார், அறங்காவலர்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், ஜெயலட்சுமி, மற்றும் கே.ஜி. குமரன், பௌர்ணமி மாவிளக்கு கமிட்டி தலைவர் நெல்லையப்பன், ஏ.வி.எம். மருத்துவமனை மருத்துவர் சுப்புராஜ், தொழிலதிபர்கள் டி.ஏ. தெய்வநாயகம், ரமேஷ், ஜலதுர்கா வார வழிபாட்டு அறக்கட்டளை அமைப்பாளர் ஜெயராணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கீதா முருகேசன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory