» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் : திமுக பிரமுகர் கைது - ரூ.1,05,000 ரொக்கம் பறிமுதல்!

திங்கள் 20, ஏப்ரல் 2026 11:36:22 AM (IST)



தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய புகாரில், திமுகவைச் சேர்ந்த ஒருவரைப் பறக்கும் படை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிநாயகபுரம் 5-வது தெருவில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்து கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூட்டுறவுச் சார்பதிவாளர் பொன்மாரி தலைமையில், மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் அடங்கிய குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளைக் கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் தப்பியோட முயன்றனர். எனினும், அவர்களை விடாமல் துரத்திய அதிகாரிகள், ஒருவரை மடக்கிப் பிடித்தனர். 

அவரைச் சோதனை செய்தபோது, அவரது வசம் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.1,05,000 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் இருந்த ஒரு குறிப்பேட்டைப் பறிமுதல் செய்தபோது, அதில் வாக்காளர்களின் பெயர், பாக எண் மற்றும் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

பிடிபட்ட நபரைத் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், இதுகுறித்து புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகன் பாலன் (27) என்பதும், அவர் திமுக பிரமுகர் என்பதும் உறுதியானது. இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory