» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு; டீசல் அளவு உயர்வு: அதிமுக வேட்பாளர் சத்யா தேர்தல் வாக்குறுதி!

திங்கள் 20, ஏப்ரல் 2026 8:45:34 AM (IST)



விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா, வேம்பார் உள்ளிட்ட மீனவப் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டித் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வேம்பார் கிராமத்தில் உள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சத்யா தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து வேம்பார் பேருந்து நிலையம், சிலுவைபுரம், கலைஞானபுரம், பெரியசாமிபுரம், குஞ்சையாபுரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது மீனவ மக்களிடையே சத்யா பேசிய முக்கிய வாக்குறுதிகள்: நாட்டுப் படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் அளவு 350 லிட்டரிலிருந்து 500 லிட்டராக உயர்த்தப்படும். விற்பனை வரி ரத்து செய்யப்பட்ட எரிபொருள் மாதம் 4,000 லிட்டர் வீதம் வழங்கப்படும்.

கடலில் விபத்துக்குள்ளாகும் அல்லது உயிரிழக்கும் மீனவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்ட படகுகளை மீட்க கடற்கரைப் பகுதிகளில் பிரத்யேக 'இழுவை படகுகள்' அமைக்கப்படும்.

65 வயது கடந்த மீனவர்களுக்கு நலவாரியம் மூலம் மாதம் ரூ.2500 ஓய்வூதியம் வழங்கப்படும். மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். ஏரி மற்றும் குளங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வலை உள்ளிட்ட உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

தற்போதைய திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிச் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் சத்யா விமர்சித்தார். தமிழகத்தில் நல்லாட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன் கிருஷ்ணன், அமமுக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory