» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் இனி மக்கள் பலமே எடுபடும்; பண பலம் செல்லாது: தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:42:04 AM (IST)



தமிழகத்தில் இனி மக்கள் பலமே எடுபடும்; பண பலம் செல்லாது என்று கோவில்பட்டி தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாலசுப்பிரமணியன், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், அங்கிருந்து திரளான தொண்டர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று சார் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தார். 

அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஹிமான்சு மங்கலிடம் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழக வெற்றிக் கழகம் என்பது வெறும் கட்சி அல்ல, அது ஒரு அரசியல் புரட்சி. மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. எங்களது தலைவர் விஜய் அவர்கள் தான் உண்மையான மக்களாட்சியைக் கொடுப்பார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இதுவரை நடந்த தேர்தல்கள் வேறு, தற்போது நடக்கும் தேர்தல் வேறு. இதில் ஏற்படப்போகும் மாற்றங்களை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்குத் தலைவர் வாய்ப்பளித்துள்ளார். மக்கள் எங்களை அரசியல்வாதிகளாகப் பார்க்காமல், தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்க்கின்றனர்.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதே எங்களின் முதன்மை இலக்கு.

இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. நலிவடைந்து வரும் உள்ளூர் தொழில்களை மீட்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வோம். கோவில்பட்டி தொகுதியில் நிலவும் 80-க்கும் மேற்பட்ட நீண்டகாலக் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்.

"நாங்கள் அரசியலுக்குப் பணம் சம்பாதிக்க வரவில்லை; மக்களுக்காகச் சேவை செய்யவே வந்துள்ளோம். தமிழகத்தில் இனி மக்கள் பலம் தான் எடுபடும், பண பலம் செல்லுபடியாகாது. அதற்கான தீர்ப்பை வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் எழுதுவார்கள். 2026-ஆம் ஆண்டு கோவில்பட்டி மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியான ஆண்டாக அமையும்," என்று அவர் உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory