» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரிங் ரோடு: திமுக வேட்பாளர் கருணாநிதி வாக்குறுதி!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:37:53 AM (IST)



கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரிங் ரோடு அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளர் கா.கருணாநிதி வாக்குறுதி அளித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கா. கருணாநிதி, நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, திமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அங்கிருந்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கொட்டும் மழையிலும் ஊர்வலமாகச் சென்றார். பின்னர், சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹிமான்சு மங்கலிடம் தனது மனுவை வழங்கினார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கா. கருணாநிதி தெரிவித்ததாவது: கோவில்பட்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 'ரிங் ரோடு' (வட்டச் சாலை) அமைக்கப்படும். இது எங்களது தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தப்பட்டுச் சாலை விரிவுபடுத்தப்படும்.

தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் தார்ச் சாலை, வாறுகால் (சாக்கடை) வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும். சமுதாய நலக்கூடங்கள் இல்லாத ஊர்களில் புதிய கூடங்கள் கட்டித் தரப்படும்.

அனைத்துக் கிராமங்களுக்கும் சீவலப்பேரி குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது குடிநீர் திட்டத்தில் விநியோகக் குழாய்கள் முறையாகப் பதிக்கப்படாத நிலையைச் சீரமைத்து வருகிறோம். பழுதடைந்த மோட்டார்களுக்குப் பதிலாக 3 புதிய மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைச் சீரமைத்துத் தூய்மையான குடிநீர் வழங்க உறுதி பூண்டுள்ளேன்.

"ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சி உறுப்பினர் இருந்தால் தான் அனைத்து வசதிகளையும் விரைவாகச் செய்து தர முடியும். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராவார்.

கடந்த ஆட்சியில் குடிநீர் திட்டத்திற்காகப் போடப்பட்ட 30 கோடி ரூபாய் திட்டத்தை லோனாக மாற்றியதால் நகராட்சியால் கட்ட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை ரத்து செய்து, பாதியை மானியமாகப் பெற்றுத் தந்துள்ளோம். மக்கள் மத்தியில் திமுகவுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, கோவில்பட்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory