» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பப் பிரச்சினையில் சோகம்: முன்னாள் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:51:27 AM (IST)

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முன்னாள் ராணுவ வீரர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்குமயிலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சுரேஷ் (37). முன்னாள் ராணுவ வீரரான இவருக்குப் பரமேஸ்வரி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சுரேஷ் சில மாதங்களுக்கு முன்புதான் ராணுவப் பணியை முடித்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

ஊருக்கு வந்த நாள் முதலே சுரேஷிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்ட பரமேஸ்வரி, தனது மகனுடன் கோவையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுரேஷிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சில நாட்களுக்கு முன்பு பரமேஸ்வரி மீண்டும் வடக்குமயிலோடைக்கு வந்துள்ளார். இது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட கடுமையான மோதலால் மனமுடைந்த சுரேஷ், அதே ஊரில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த கயத்தாறு போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றிக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory