» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவல்துறையினர் 9பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 9 போலீஸ்காரர்களும் இன்று மாலை தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவல்துறையினர் 9பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தீர்ப்பு விபரம்

சாத்தான்குளம் கொலை வழக்கு - தண்டனை விவரம் குறித்து நீதிபதியின் கருத்து; மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை என நீதிமன்றம் கருதுகிறது. தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கியுள்ளனர்.

வழக்கு விவரங்களை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழாவகையில் தீர்ப்பிருக்க வேண்டுமென நீதிமன்றம் நினைக்கிறது. பொருளாதார ரீதியான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட போலீசாரில் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு காட்ட இயலாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Apr 6, 2026 - 06:12:32 PM | Posted IP 172.7*****

இது சூப்பர் தண்டனை , அடுத்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டு கொன்ற காவலர்களுக்கு எப்போ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory