» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாட்டை லாட்டரி குடும்பம் தான் ஆட்சி செய்கிறது: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேட்டி!
சனி 23, மே 2026 4:52:42 PM (IST)

தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசை, "லாட்டரி குடும்ப ஆட்சி" என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது : "எங்களுடைய திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் ஆணைப்படி, கடந்த 5 ஆண்டு காலத் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தெருமுனைப் பிரச்சாரங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக உள்கட்டமைப்புகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்.
புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களது கட்சியையே அதன் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கைப்பற்றி விடுவாரோ என்ற பயத்தில் உள்ளனர். தற்போது தமிழகத்தில் எந்த ஒரு அறிக்கையும் ஆதவ் அர்ஜுனா பெயரில்தான் வருகிறது. தமிழ்நாட்டை ஒரு லாட்டரி சீட்டு குடும்பம்தான் பின்புலத்திலிருந்து இயக்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் லாட்டரி சீட்டு கலாசாரம் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பு கூறினார். ஆனால், இப்போது கோவையில் சிறுமி கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னையில் நடக்கும் தொடர் குற்றங்கள் எனத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது.
தவெக-வின் சாதாரண நிர்வாகிகள் கூட ரேஷன் கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சட்டவிரோதமாக ஆய்வு மேற்கொள்கிறார்கள். இதனைச் செய்யச் சொல்லி ஆதவ் அர்ஜுனா தான் உத்தரவிட்டிருப்பார் என்று தெரிகிறது. மேலும், மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போதைய பட்ஜெட்டில் அதனை முறையாகச் செய்யவில்லை.
எங்கள் கழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வற்புறுத்தியதன் அடிப்படையில் தான், தற்போது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கான ரூ. 20,000 உதவித்தொகை, பெண்களுக்குப் பட்டுச்சேலை, இலவசப் பேருந்து பயணம் போன்ற உன்னதத் திட்டங்களை இந்த அரசால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. சட்டமன்றத்தில் திமுக சார்பில் இதற்கெல்லாம் அவர்களிடம் பதில் கேட்போம்."
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் 100 ரூபாய் விஐபி தரிசன டிக்கெட்டுகளில் பல கோடி ரூபாய் மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதில் தொடர்புடைய அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் புதிய அரசு உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்றபோது, கேரளாவுக்குக் கனிமவளங்கள் கொண்டு செல்லும் 250-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டேன். எல்லையில் நிலவும் இந்த அனுமதிச் சீட்டுப் பிரச்சனையால் தொழில் செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா இந்தியாவின் ஒரு மாநிலம்தான்.
அங்குக் காய்கறிகள் உள்ளிட்ட நமது மாநிலப் பொருட்கள் அதிகம் விற்பனையாவதால், இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்காமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்று தனிச் சட்டத்தை உருவாக்கி அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவரும், எஸ்பி-யும் தன்னிச்சையாகச் செயல்படுவது போலத் தெரிகிறது." என்றார்.
அமலாக்கத்துறை கடிதம் குறித்த விளக்கம்: "என் மீதான சொத்துவிபர வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஊடகங்களில் செய்திகள் வருவது போல, தற்போதைய சூழலில் மத்திய அமலாக்கத்துறை எனக்கு எந்தவொரு புதிய விசாரணை நோட்டீஸும் வழங்கவில்லை; எனக்கு எந்தவிதமான நெருக்கடியும் சட்டப்படியாகக் கொடுக்கப்படவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் எடுக்கும் முடிவின்படி ஒரு சாதாரணத் தொண்டன் நிறுத்தப்பட்டாலும், திமுக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு அமோக வெற்றி பெறும்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி வேனில் கடத்திய 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! – ஓட்டுநர் கைது!
சனி 23, மே 2026 8:21:50 PM (IST)

அரிசி ஆலை பாய்லரில் தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளி பலி!
சனி 23, மே 2026 8:16:22 PM (IST)

மனைவியுடன் குடும்பத் தகராறு: வாலிபர் தற்கொலை!
சனி 23, மே 2026 8:08:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் புதிய எஸ்பி அபிஷேக் குப்தா சந்திப்பு!
சனி 23, மே 2026 5:26:50 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
சனி 23, மே 2026 4:13:17 PM (IST)

டூவிபுரம் பூங்காவில் மேயர், ஆணையர் ஆய்வு! – குறைகளை 1 மணி நேரத்தில் சரிசெய்ய உத்தரவு!
சனி 23, மே 2026 3:39:58 PM (IST)










