» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா: சிகப்பு சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா

சனி 28, பிப்ரவரி 2026 8:13:32 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை), சுவாமி சண்முகப் பெருமான் சிகப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமியும் அம்மனும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏழாம் திருவிழாவான நேற்று, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்குத் திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

அதிகாலை 5 மணியளவில் சண்முகப் பெருமானின் உருகுசட்ட சேவை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெற்றன. பின்னர், பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு, மாலை 4.30 மணிக்குத் தங்கச் சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா சென்றார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பத்தாம் நாளான மார்ச் 2-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. அன்று பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர்கள் வீதிவலம் வந்து நிலை சேரும். 11-ஆம் நாளான மார்ச் 3-ஆம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், 12-ஆம் நாள் மாலை மஞ்சள் நீராட்டு மற்றும் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. 

பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கனகராஜன், மதுரைவீரன் உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory