» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா தேர்பவனி கோலாகலம்:திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திங்கள் 16, பிப்ரவரி 2026 8:09:48 AM (IST)


தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா தேர்பவனி விமர்சையாக நடைபெற்றது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் பக்திப்பரவசமாகத் தொடங்கியது. விழாக் காலங்களில் தினமும் மாலையில் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் ஒன்பதாம் நாள் அன்று சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் சிகர நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு மறைமாவட்ட அருட்தந்தை சகாய வேந்தன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் தூய தோமையார் கல்வி குழும அருட்தந்தை அமலன் தமியான், பங்குத்தந்தை செல்வன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சிறப்புத் திருப்பலியின் போது, ஏராளமான சிறுவர்-சிறுமியர்களுக்குப் புதுநன்மை (முதல் திருவிருந்து) வழங்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவப் பெருமக்கள் கலந்துகொண்டு இறை ஆசீர் பெற்றனர்.

விழாவின் சிறப்பம்சமாக, லூர்தம்மாள்புரம் ஊர் மக்கள் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட திருத்தேரின் பவனி முதன்முறையாக நடைபெற்றது. பங்குத்தந்தை தேரை மந்திரித்துத் தொடங்கி வைக்க, பொதுமக்கள் தேரினை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

ஆலய வளாகத்தில் தொடங்கிய இந்தத் தேர்பவனி, லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, எஸ்.எஸ். மாணிக்கபுரம் மற்றும் சென் மேரிஸ் காலனி வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தேர்பவனியைத் தொடர்ந்து நேற்று மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் கொடியிறக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்பியங்களின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்த விழா ஏற்பாடுகளைப் பங்குத்தந்தை செல்வன் பெர்னாண்டோ தலைமையில், பங்குப் பணிக்குழுவினர், அன்பியங்கள், அருள் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory