» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மைப்பணியாளர்களின் பணி போற்றத்தக்கது : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:03:52 PM (IST)

குப்பைகளையெல்லாம் சேகரித்து செல்லுகின்ற தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது போற்றத்தக்க பணியாகும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், தெற்கு வேம்பார் பகுதியில் ஹெச்சிஎல் அறக்கட்டளை சமுதாய் சார்பில் தூய்மையான கடலோர கிராமங்கள் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், துவக்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :- தூய்மையான கடலோர கிராமங்கள் என்ற முன்முயற்சியை இன்று வேம்பார் கிராமத்தில் துவக்கி வைத்து, இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முன்முயற்சியை ஹெச்சிஎல் நிறுவனத்தின் சமுதாய திட்டத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் முக்கியமாக நமது தூய்மை காவலர்களுக்கு சில உதவி செய்யக்கூடிய உபகரணங்களையும், அதனுடன் எவ்வாறு திடக்கழிவுகளை பிரித்தெடுத்து, அதில் பயன்படக்கூடிய பொருட்கள் எது? பயன்படாத பொருட்கள் எது? உலர்கழிவுகள் எது? திரவக்கழிவுகள் எது? என்று பிரித்தெடுப்பதற்கான, முழுமையான வசதிகளை இந்த வேம்பார் கிராமத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் பல்வேறு விதமான சமுதாய பணிகளில் இந்த திடக்கழிவு மேலாண்மையை நிறுவுவதற்கான முன்னேற்பாடுகள் மிக உபயோகமாக இருக்கும். இதேபோன்ற முன்னேற்பாடுகள், நமது ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக பல இடங்களில் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றோம்.
அங்கெல்லாம் என்ன நிகழ்வுகள் நடந்திருக்கின்றன? அது செயல்படுகிறதா? அல்லது செயல்படவில்லையா? பிரித்தெடுத்தல் நடைபெறுகிறதா அல்லது நடைபெறவில்லையா? என்பதையும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் சமுதாய பணிக்குழுவினர் ஆய்வு செய்து, ஒருவேளை அங்கு அப்பணிகள் நடைபெறவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை எவ்வாறு தவிர்ப்பது? மக்களிடம் எவ்வாறு அந்த பழக்கத்தை ஏற்படுத்துவது? மற்றும் அதனை பின்பற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால், எவ்வளவு பெரிய கட்டமைப்புகளை எல்லாம் நாம் உருவாக்குகிறோம். இதேப்போன்று பல்வேறு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பல கட்டமைப்புகளை அரசு சார்பிலும், ஊராட்சிகள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். ஆனால் என்ன நோக்கத்திற்காக உருவாக்கினோம் என்பதை உணர்ந்து அதனை பயன்படுத்துகின்ற பொழுதுதான் அது முழுமையாக சென்று சேருகிறதா என்பதை உறுதிசெய்ய முடியும். இத்திட்டத்திற்கான மிக முக்கியமான அடிப்படை நோக்கம் எங்கு குப்பைகள் உருவாகுகின்றனவோ, அங்கேயே மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரிக்க கூடிய தன்மை என்ற இந்த புரிதல் எல்லா வீடுகளில் உள்ளவர்களுக்கும் இருக்கிறதா? இல்லையா? என்பதில் தான் வெற்றி இருக்கிறது.
ஒருவேளை, நமது தூய்மைக்காவலர்கள் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கின்ற பொழுது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனியாக பிரித்துக் கேட்கின்ற பொழுது, பொதுமக்கள் மொத்தமாக குப்பைகளை கொடுத்தால் அது பயனில்லை. பின்னர் அதனை பிரிப்பதற்கு சிரமம் அடைவார்கள். அதற்கு என்ன புதிய முயற்சி எடுக்கலாம்? என்ன மாதிரியான செயல்களை செய்தால் மக்கள் எளிதாக புரிந்து கொண்டு குப்பைகளை பிரிப்பார்கள்? என்பது குறித்து ஹெச்சிஎல் குழுவினர் ஆய்வு செய்யலாம். அவ்வாறு குப்பைகளை பிரித்தெடுத்து கொடுப்பவர்களுக்கு குறிப்பாக பெண்கள் தான் அப்பணிகளை பொதுவாக செய்கிறார்கள். அவர்களுக்கு பரிசுகள் / அங்கீகாரம் கொடுக்கலாமா என்பது
குறித்து நான் பேசிக் கொண்டிருந்தேன். இது ஒரு பழக்கம் தான். இரண்டு குப்பை தொட்டிகளை வைத்து, அதனை பிரித்தெடுத்து கொடுக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்துகின்ற புதுமுயற்சியில் நாம் எவ்வாறு எல்லாம் ஈடுபடலாம் என சிந்திக்கலாம். நாம் பிரிக்கின்ற குப்பைகளில் ஏதேனும், ப்ளாஸ்டிக் பொருட்கள், உலோகப் பொருட்கள், கம்பிகள் உள்ளிட்டவைகள் மீண்டும் பழைய பொருள் கடைகளில் விற்க கூடிய வகையில் இருக்கிறது. அதனை மக்களே பிரித்து, மக்களே கடைகளில் விற்றுவிட்டால் மிகவும் மகிழ்ச்சி.
குறிப்பாக, தினசரி வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என்றும், உலர்கழிவுகள் மற்றும் திரவக்கழிவுகள் என்றும் தனித்தனியாக பிரித்து கேட்கின்ற பழக்கத்தை ஏற்படுத்துகின்ற பொழுது குப்பைகள் உருவாகுவதில்லை. எனவே, இதனை பழக்கம் சார்ந்த செயல்களாக உருவாக்க வேண்டும் என்பதில் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் உட்பட பல்வேறு மாநகராட்சி மற்றும் பெருநகரங்களில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நமது மாவட்டத்திலும் செயல்படுத்துவதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக நாம் உணவு பொருட்களை சாப்பிடுகின்ற பொழுது, அதனை முழுமையாக சாப்பிடுவதில்லை. அதில் உள்ள கழிவுகளை திடக்கழிவுகள் / திரவக்கழிவுகள் / உலர் கழிவுகள் என்பதில் பிரிப்பதில் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். எந்த மாதிரியான குப்பைகளை வாங்க வேண்டும் அல்லது வாங்க கூடாது என்ற புரிதல் இருக்க வேண்டும்.
குறிப்பாக கேரளா மாநிலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை நான் கேள்விப்பட்ட பொழுது, உணவுப் பொருட்களை வாங்கி அதனை முழுமையாக சாப்பிட முடியவில்லை எனில் மீதமுள்ள கழிவுகளை எவ்வாறு பிரித்தெடுக்கின்றார்கள் என்றால் உணவு வாங்கிய பொருட்கள் மற்றும் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் கழுவி எடுக்க வேண்டும். அதில் உள்ள ப்ளாஸ்டிக், பாலீத்தின் கவர் போன்ற பொருட்களை எல்லாம் உலர்த்தி எடுக்க வேண்டும். மீதமுள்ள கழிவுகளை உலர் கழிவுகள் என்றும், திடக்கழிவுகள் என்றும், திரவக்கழிவுகள் என்றும் பிரித்தெடுக்கலாம்.
மேலும் அங்கு ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களை தினசரி சேகரிப்பதில்லை. இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை பெரிய அளவிலான வண்டிகள் வைத்து உலர் பொருட்கள் எல்லாம் சேரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்படும். மீதமுள்ள திரவ உணவுக்கழிவுகளையே தினசரி சேகரித்து வருகிறார்கள். இவ்வாறு வீடுகளில் தனித்தனியாக பிரித்தெடுக்கின்ற செயலை செய்கின்ற பொழுது இடைவெளியில்லாமல், தரமாக பிரித்தெடுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. அதுபோன்று, கேரளாவில் ப்ளாஸ்டிக் பைகள் எல்லாம் துணி உலர்த்தப்படுவது போல் உலர்த்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார்கள்.
எனவே, இது வேடிக்கையான செயலாக இருந்தாலும், இவ்வாறான பொருட்களை நாம் கழுவி, உலர்த்தி கொடுக்க கூடிய பொறுப்பு நமது வீட்டுள்ளவர்களுக்கு இருக்கிறது. ஆனால் நாம் நமது பகுதிகளில் மொத்தமாக ஒரே குப்பையாக கொடுக்கின்றோம். அதனை தூய்மைப்பணியாளர்கள் சேகரித்து வந்து பிரித்தெடுக்கின்றனர். இந்த பழக்கத்தை மாற்றுதல் என்பது மிகப்பெரிய கஷ்டமான செயலாகும். ஆனால் அந்த செயலை செய்துவிட்டால் வெற்றிகரமான செயலாக அமையும். வீட்டிலுள்ளவர்களுக்கு இது கூடுதலான பணியாக இருக்கும்.
நாம் எவ்வாறு வீடுகளில் உள்ள தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை கழுவி, ஒழுங்குப்படுத்துகின்றமோ அதேபோன்று உணவுக் கழிவுகள் மற்றும் அதனுடன் உள்ள தட்டுகள், ப்ளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை கழிவி உலர்த்துகின்ற பொழுது திரவக் கழிவுகளையும், உலர் கழிவுகள் என்பதை பிரித்தெடுப்பதில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. அவ்வாறு தொடர்ச்சியாக நாம் செயல்படுத்துகின்ற பொழுது, இரண்டு குப்பை தொட்டிகளும் பயன்பாட்டில் இருக்கும். நானும் தினந்தோறும் இரண்டு குப்பைத் தொட்டிகளிலும் சேகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். மக்காத குப்பைகள் மற்றும் உலர் கழிவுகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையில் வைத்து, அதனை சேகரிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
மக்கும் குப்பைகளான திரவக்கழிவுகள் உள்ளிட்டவற்றை தினந்தோறும் சேகரிப்பதற்குமான நடைமுறையை கேரளா அரசு பின்பற்றுவது போல், நமது ஊர்களிலும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து, அதனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, இந்த நிகழ்வில் மிக முக்கியமானவர்கள் தூய்மைப்பணியாளர்களாகிய நீங்கள் தான். குப்பைகளையெல்லாம் சேகரித்து எடுத்துச் செல்லுகின்ற உங்களுடைய பணி என்பது போற்றத்தக்க பணியாகும். இந்தப்பணிகளில் புதிய புதிய முயற்சிகளை நாம் மேற்கொள்கின்ற பொழுது நமது பகுதிகளிலும் இதனை செயல்படுத்த முடியும்.
இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்க கூடிய ஹெச்சிஎல் நிறுவனத்தின் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கு நமது ஊராட்சி பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஹெச்சிஎல் அறக்கட்டளை குழுவினர், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









