» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வியாழன் 5, பிப்ரவரி 2026 5:30:30 PM (IST)

வடவல்லநாடு உட்பட 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 363 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05.02.2026), சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.515.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 363 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், வடவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட சேதுராமலிங்கபுரம் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்டிருக்கின்ற 363 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்திருக்கிறார்கள். 

அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, வடவல்லநாடு, சேதுராமலிங்கபுரம் கிராமத்தில், இந்த திட்டத்தினுடைய நீர் சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க கூடிய அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 363 குடியிருப்புகளுக்கான இத்திட்டத்திற்கான ஒப்பந்த மதிப்பீடு என்பது 515.72 கோடி. கிட்டத்தட்ட 516 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 516 கோடி ரூபாய் என்பதை விட, அது எத்தனை மக்களுக்கு பலனளிக்கிறது என்று பார்த்தால், 3 இலட்சத்து 47 ஆயிரம் மக்களுக்கு, தினசரி தாகத்தை தீர்ப்பதற்காக இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இந்த வருடத்திற்கு 3 இலட்சம் பேர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர். ஆனால் 2039 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர்களாக மக்கள் தொகை உயரக்கூடும். இது 2054 ஆண்டில் 3 இலட்சத்து 96 ஆயிரமாக உயரக்கூடும் என்ற கணக்கீடுகளையெல்லாம் செய்து, ஒட்டுமொத்தமாக இதுபோன்ற நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கணக்கீடுகளை செய்து, இத்திட்டத்தினை சிறப்புற வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திட்டத்தின் தொடக்கம் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றாலும், நான் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த மாவட்டத்தில் பணியேற்ற பொழுது, இத்திட்டம் நிறைவடையும் தருவாயில் இருந்தது. மேலும், ஒவ்வொரு வாரமும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நகராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள் என ஒவ்வொரு பகுதிகளிலும் குடிநீர் சரியாக வழங்கப்படுகிறதா என காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதில் முதன்மையான திட்டமாக இந்த திட்டத்தை ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்து கொண்டிருப்போம். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் ஆகியோர் ஒவ்வொரு வாரமும் எந்த மாதத்தில் முடிக்கப் போகிறோம் என்பதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். பல்வேறு சிறு சிறு சிக்கல்களையும் ஒருங்கிணைத்து அதனை சரிசெய்வதற்காகவும், மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கிராமப் பகுதிகளில் உள்ள சிக்கல்களையும், அதேப்போல் மாப்பிள்ளையூரணி வரை இடையிலான நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் சிக்கல்களையெல்லாம் தீர்த்து, கடைசியாக ஊராட்சிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீரேற்றப்பட்டு, அங்கிருந்து மீண்டும் கிராம மக்களின் வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்காக தண்ணீர் குழாய்களை நிலத்திலே பதிக்க வேண்டும். 

அதற்கு கிராம ஊராட்சியின் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் பொது நிதியிலிருந்து முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தினை முழுமையாக செய்து முடிப்பதற்கு அக்டோபர் மாதம் வரை இப்பணி நடைபெற்றது. குறிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இத்திட்டம் தாமதமாகி கொண்டிருக்கின்றது, மக்களுக்கு விரைந்து தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று நானும் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தி வந்தேன். அதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற அவர்களும் இத்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக இப்பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டார்கள். தொடர்ந்து, இது சம்பந்தமான பிரச்சனைகளை எனது கவனத்திற்க எடுத்து வந்து கொண்டேயிருப்பார்கள். 

ஒவ்வொரு சிறு சிறு பிரச்சனைகளையும் படிப்படியாக தீர்த்து, இறுதியாக ஊரக பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கி, அதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்ணீர் சென்று விட்டாதா என்பதை பின்பற்றி, ஒன்றரை முதல் 2 மாதங்களுக்கு முன்பு எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் சென்று சேருவதற்கான எல்லா பணிகளையும் நிறைவு செய்தார்கள். எனவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர், உதவி நிர்வாகப் பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் சிறப்பாக இத்திட்டத்தில் பணிபுரிந்தார்கள், அவர்களை நான் பாராட்டுகிறேன்.

நாம் இன்றைக்கு தினசரி குழாய்களில் தண்ணீரை பெறுகிறோம் என்றால், அதற்கு பின்னால் இத்தனை பெரிய நீண்ட உழைப்பு, திட்டமிடுதல், அதற்கான கட்டமைப்பு, உருவாக்கம் உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து பணிகளும் உள்ளது. இந்த பணிகளை எல்லாம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கலாம் என்று திட்டமிட்டு இதனை செயல்படுத்தியிருக்கிறோம். 

எனவே, மக்கள் இதன் சிரமங்களை புரிந்து கொண்டு, இது கடைசியாக சென்று சேரக்கூடிய விளாத்திகுளம் பகுதியில் கடைசி ஊர்களில் உள்ள கிராம மக்கள் அனைவரும் தண்ணீரின் அருமையை அறிந்து கொண்டு, அதனை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும், குறைவாகவும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் அன்பான வேண்டுகோளாகும். ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு வெளியேற்றக்கூடிய தண்ணீரின் அளவு என்பது 1 கோடியே 1 இலட்சம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் இங்கிருந்து மற்ற ஊர்களுக்கு சென்று சேர்கிறது. 

கடைசியாக 2054 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1 கோடியே 65 இலட்சம் லிட்டர் அளவுக்கு நீர் இறைக்க கூடிய திறனுக்கு, அருமையான திட்டமிடுதலுடன் வடிவமைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த கூட்டு குடிநீர் திட்டத்தில் 42 தரைமட்ட தொட்டிகளும், புதிதாக 60 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளும், ஏற்கனவே ஊராட்சிகளில் பயன்பட்டிருந்த 356 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக கூட்டு குடிநீர் திட்டத்தில் 396 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் செய்யப்படுகிறது. 1042 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் 3 இலட்சம் நபர்களின் தாகத்தை தினசரி தீர்த்து வருகிறது என்ற வகையில் இத்திட்டத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போல் எனது பணிக்காலத்தில் இது நிறைவடைந்தது என்பது மகிழ்ச்சியான தருணமாகும்.

இந்த நிகழ்வை சாத்தியப்படுத்தி கொடுத்த அனைத்து அலுவலர்களுக்கும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டம் ஒரு உயிர்நாடியான திட்டம். 3 – 4 ஒன்றியங்களுக்கு உயிர் நாடியான இந்த திட்டத்தை சிறப்புற, தடையில்லாமல், மிகவும் தரமான தண்ணீரை மக்களுக்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள் எடுப்பார்கள். அனைவரும் பொறுப்புணர்வுடன் அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தலைமை பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை, மு.கணேஷ், நிர்வாக பொறியாளர், கிராம குடிநீர் திட்ட கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தூத்துக்குடி இராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் கிராம குடிநீர் திட்ட உபகோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தூத்துக்குடி மகேஷ்குமார், கிராம பொதுமக்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory