» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பஸ் மோதி 6ஆம் வகுப்பு மாணவன் பலி : தந்தை கண்முன்னே பரிதாபம்
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:51:31 AM (IST)
ஆறுமுகநேரியில் தந்தை கண்முன்னே பஸ் மோதி 6ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து விபத்து நிகழ்ந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பேச்சி. இவர்களுக்கு ஆறுமுகவேல் (11) என்ற மகனும், 2 மகள்களும் உண்டு. ஆறுமுகவேல், தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சரவணன், மகன் ஆறுமுகவேல் ஆகியோர் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
நேற்று மாலையில் அங்குள்ள பாரதிநகர் பகுதியில் கோவில் அருகில் உள்ள தசரா பிறைக்கு செல்வதற்காக சரவணன், மகன் ஆறுமுகவேலை சைக்கிளில் அழைத்து கொண்டு புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் தங்களது வீட்டுக்கு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆறுமுகநேரி- அடைக்கலாபுரம் சாலையில் சென்றபோது, மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிளின் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஆறுமுகவேலின் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகவேலை சிகிச்சைக்காக ஆறுமுகநேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் திரண்ட ஆறுமுகவேலின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதால் வேகத்தடை அமைக்க வேண்டும், இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
உடனே திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து விபத்து நிகழ்ந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










