» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தூர் அருகே 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு: தொல்லியல் ஆர்வலர் தகவல்!

சனி 13, செப்டம்பர் 2025 11:18:31 AM (IST)


தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், குளத்தூர் தெற்கு பகுதியில் உள்ள பனையூர் கிராமத்தில் காணப்படும் அணைக்கட்டு பகுதியின் தெற்கே கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் விளைவால் மண்ணில் காணப்படும் மிக அதிக அளவிலான கடல் சிப்பி எச்சங்கள் குறித்து ஊர் மக்கள் பகிர்ந்த புகைப்படம் அடிப்படையில் அவ்விடத்தையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் ஆய்வு செய்யும் விதமாக 10.09.2025 அன்று தூத்துக்குடியினை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி மேற்கொண்ட கள ஆய்வுகளில் சர்வே எண் 415ன் பகுதிகளில் மிக அதிக அளவிலான கடல் சிப்பிகளின் எச்சங்கள் படிமங்களாகவும், சர்வே எண் 215 உள்ளடக்கிய மிக மிக பழமையான மணல் கலவை கற்களால் கட்டமைக்கப்பட்ட சுவற்றினை கொண்ட அணைக்கட்டுப்பகுதியினையும், மத்தியில் மதகின் சுவற்றில் வெளிபுறம் காணப்பட்ட இராமாயண நிகழ்வு குறித்த சிற்பத்தையும், சுவறுகளில் காணப்பட்ட மிக மிக தொன்மையான எழுத்து குறியீடுகளையும் கண்டறிந்ததாக தகவல் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது, இந்த சுவற்றில் உள்ள குறியீடுகளை உற்று நோக்கி ஆய்வு செய்ததன் அடிப்படையில் இவைகள் பெருங்கற்காலம் (அ) அதற்கு முற்பட்ட மாண்டிங் குறியீடுகளை ஒத்து காணப்படுகின்றன என்றும் இவற்றில் பிராமி எழுத்து போன்ற சில குறியீடுகளும் உள்ளன என்றும் இவை நமக்கு இந்த கடற்கரை பகுதியின் சுமார் 5000 – 3000ம் ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்றார்.

மேலும் இராமாயண நிகழ்வு சிற்பத்தின் தோற்றம் மிகவும் தொன்மையான கலாச்சாரத்தினை கொண்டதாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. இந்த பகுதியில் கடல் எச்சங்கள் காணப்படும் பகுதி கடற்கரையில் இருந்து 4.0கி.மீ தூரத்தில் உள்ளது எனவும், பொதுவாக இத்தகைய நத்தைகள் இயற்கை பேரழிவின் பின் விளைவு காரணிகளால் மிக பெரிய அளவில் உருவாகலாம் என்பது புவியியல் அறிஞர்களின் கருத்துக்களாக உள்ளது எனவும் தகவல் தெரிவித்தார்.

மேலும் இந்த அணைக்கட்டு வழியே பாயும் காட்டாறு(கல்லாறு) வழித்தடம் குறித்தும், இதற்கு வடக்கே அமைந்திருந்த சுமார் 4கி.மீ விட்டம் கொண்ட ஒழுங்கற்ற வட்ட வடிவ துறைமுகம் குறித்தும் ஆங்கிலேய வரைபட அறிஞர் திரு.இராபர்ட் ஓரம் -1778ம் ஆண்டு தங்கள் இராணுவத்திற்காக வரைந்த ஆவணத்தில் தெளிவாக குறிப்பட்டுள்ளார் என்பதும், இந்த பகுதியில் இரண்டு கோட்டைகள் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார் என்பதும், ஆனால் அணைக்கட்டு குறித்த விபரம் குறிப்பிடப்படவில்லை என்பதும் நமக்கு வரலாற்று தொடர்பான ஆய்வில் பிரதான அறிவியல் ஆவண சான்றாக அமைகிறது என்றார்.

அந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராயும் பொழுது வேப்பலோடை கடற்கரையில் முகத்துவாரத்தில் இருந்து இருந்து மேற்கே 8.8கி.மீ தொலைவில் உள்ள முள்ளுர் -கொல்லன்பரம்பு இடையிலான பகுதியில் ஓர் கோட்டையும், வைப்பார் முகத்துவாரத்தில் இருந்து மேற்கே சுமார் 3.5கி.மீ தூரத்தில் ஓர் கோட்டையும் உள்ளது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆனால் இன்று இந்த பகுதிகளில் எவ்வித கோட்டைகளும் மண்ணின் மேற்பரப்பில் காணப்படவில்லை என்றார். எனவே இந்த அணைக்கட்டு இந்த நகரத்தின் அழிவிற்கு பின் வந்த ஆட்சியாளர்களால் சிதைவுற்ற கோட்டை (அ) அரண்மனைகளின் கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டதா என்பது ஆய்விற்கு உட்பட்டது என்றார்.


இந்த பகுதியில் அதிக அளவிலான மண்கல் தொட்டிகள் மற்றும் கட்டிட சிதைவுகள் இன்றும் மக்களின் பயன் பாட்டில் பண்டைய எச்சங்களின் சான்றுகளாக உள்ளன. எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் இந்த அணைக்கட்டு பகுதியில் தொல்லியல் அகழாய்வு செய்திட உத்தரவு இடவேண்டியும், நமது பொதுப்பணித்துறைக்கு தகுந்த அறிவுரை வழங்கி இந்த அணைக்கட்டு சுவற்றினையும், கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கைகளை பதிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory