» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:00:00 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), எஸ்.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), ஆகியோர் இன்று (12.09.2025) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கள ஆய்வின் போது, திருக்கோவில் வளாகத்திலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு 2024-2026-ன் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : தமிழ்நாடு அரசு உறுதிமொழிக்குழு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பால பணிகள், தங்கும் விடுதிகள், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கட்டிடம், திருநீறு தயாரிக்கும் கட்டிடம், அலுவலக கட்டிடம், பல்லாயிரகணக்கான பொதுமக்கள் வந்து செல்வதற்கான நிழற்கூடங்களுடன் கூடிய மண்டபங்கள், உணவருந்தும் கூடங்கள், யானைக்கான ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட இங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். 

கடந்த ஆண்டு, அரசு உறுதிமொழிக்குழு வருகை தந்து பணிகளின் உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து நேரடியாக களத்தில் ஆய்வு செய்தோம். அதேப்போல் இன்றும், கடல் அரிப்புக்காக ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிற பணிகள், சூரசம்ஹாரம் நடைபெறுகின்ற பொழுது இலட்ச கணக்கான மக்கள் கூடுவதற்கு போதிய இடம் இல்லாமல் கடல் அரிப்பின் காரணமாக இடப்பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் முயற்சியில் கடல் பகுதியில் கான்கீரிட் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இந்து அறநிலையத்துறை சார்பாக ரூ. 99 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளும், தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் சிவ்நாடார் சுமார் ரூ.206 கோடி மதிப்பீட்டில் உபயதாரர் நிதி என்ற அடிப்படையில் திருக்கோயிலுக்கு வழங்கி, அதில் நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு பணிகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அரசு ஒதுக்கிய ரூ.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற கட்டிடம், விடுதிகள் சார்ந்த அனைத்து பணிகளும் வருகின்ற டிசம்பர் 2025க்குள் முடிவு பெற்று, முழுவதுமாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கோவில் நிர்வாக கட்டுபாட்டின் கீழ் இயங்க இருக்கிறது.

கடல் அரிப்பு தொடர்பான பணிகளும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 15 சதவீதம் பணிகள், அதாவது கற்களை கொட்டி வலைகள் அமைத்து பாதுகாப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. 01 பணி மட்டும் நிபுணத்துவம் பெற்ற குழுக்கள் மூலம் அறிக்கை செய்யப்பட்டு அப்பணியும் தொடங்க உள்ளது. ஆகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழியினை நிறைவேற்றுகின்ற பணிகளும், உபயதாரர் நிதியிலிருந்து ரூ. 206 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்ற பணிகள் என அனைத்து பணிகளும் முழுமை பெற்றால், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலிருந்து திருக்கோவிலுக்கு வருகை புரிகின்ற இலட்ச கணக்கான பக்தர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, தங்கும் இல்லங்கள், ஓய்வு இல்லங்கள், கழிவறை வசதிகள், உணவகங்கள், நீண்ட வரிசையில் நிற்பவர்களுக்கு நிழற்கூடங்களுடன் கூடிய பணிகள் என அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும், கட்டடங்கள் சார்ந்த பணிகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்திருக்கிறது. தூண்டில் வளைவு, சிறு துறைமுகங்கள் போன்ற பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐஐடி மற்றும் இந்தியாவில் உள்ள மிக சிறந்த நிறுவனங்கள் மூலம் ஆய்வறிக்கை பெறப்பட்டு, ரூ.30 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, சூரசம்ஹாரம் நடைபெறுகின்ற இடத்தில் இடைவெளி குறையாமல் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மண் அரிப்பின் காரணமாக இடப் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 50 சதவீதம் நிதி ஒதுக்கீடும், மாநில அரசு சார்பில் 50 சதவீதம் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்பணிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் விரைவில் தொடங்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கலந்து பேசி, தேவை ஏற்பட்டால் அரசுக்கும், போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவும், புறவழிச்சாலை அமைக்க இன்று நடைபெறுகிற ஆய்வுக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் கலந்து பேசி, தேவை ஏற்பட்டால் இக்குழு அதற்குரிய பரிந்துரைகளையும் வழங்கும்.

மேலும், ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறதோ அதன் நோக்கம் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை ஏற்படும். மேலும், திருக்கோயில்கள், மசூதிகள், பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக இருக்க்க்கூடிய இடங்களில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கக்கூடாது என சட்டமன்ற பேரவையில் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். 

மனமகிழ் மன்றம், திருகோவில் வளாகங்களுக்குட்பட்ட பகுதிகளில் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி அதற்கு அனுமதி அளிக்காமல், மறுபரிசீலனை செய்து அதற்கான உரிய வழிகாட்டுதல்களை இக்குழு வழங்கும். மேலும், பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளாக தற்பொழுது 41 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக கழிவறைகள் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

எதிர்காலத்தில் பயோ மெட்ரிக் முறையில் நடமாடும் கழிவறைகள் வைப்பதற்கு இக்குழு பரிந்துரை செய்யும். இலட்சகணக்கான பக்தர்கள் வருகை புரிகின்ற திருச்செந்தூர் நகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும், கூடுதலாக நிதி வசதியுடன் முறைப்படுத்துவதற்குமான நடவடிக்கையை அரசு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என  தி.வேல்முருகன் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் தருவை மைதானம் அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் மற்றும் தீயணைப்பு கருவிகளை பார்வையிட்டார். பின்னர் திருச்செந்தூர் சாலை மீளவிட்டான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட Tidel Neo (தொழில்நுட்ப பூங்கா) மற்றும் அதில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனத்தையும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் கடல் உள்வாங்கியுள்ள இடத்தையும், திருக்கோவில் பாடசாலை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குழு துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, சார்பு செயலாளர் த.பியூலஜா உள்ளிட்ட அரசு துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory