» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

சனி 17, மே 2025 11:14:31 AM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழையினால் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சிந்துப்பூந்துறை எரிவாயு தகன மேடையினையும், மேலப்பாளையம் ரோஸ் நகரில் நேற்று காற்றுடன் பெய்த கோடை மழையினால் சாய்ந்துள்ள மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

ஆய்வில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக தச்சநல்லூர் பகுதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் 33/11 கேவி உபமின்நிலையத்தில் உள்ள மணிமூர்தீஸ்வரம் மின்தொடரில் 15.05.2025 அன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மாலை 03:20 மணி அளவில் பாதுகாப்பு நலன் கருதி இந்த மணிமூர்தீஸ்வரம் மின்தொடர் மின் துண்டிப்பு செய்யப்பட்டது. மீண்டும் காற்று மழை நின்ற பிறகு மாலை 03.55 மணியளவில் மணிமூர்தீஸ்வரம் மின்தொடரில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. 

ஆனால் மணிமூர்தீஸ்வரம் மின்தொடரில் மீண்டும் ட்ரிப் (trip) ஆகி மின் தடை ஏற்பட்டது. மாலை 04.18 மணிக்கு முதல் பகுதியில் உள்ள வடக்கு பாலபாக்கியநகர் காற்றுதிறப்பான் திறக்கப்பட்டு (AB switch open) உடையார்ப்பட்டி பகுதிக்கு மின் விநியோகம் வழங்கும் போது அந்த பகுதியில் பழுது இருந்த காரணத்தினால் மீண்டும் (trip) ஆகி மின் தடை ஏற்பட்டது. அந்த பகுதியில் (Jumper Cut) பழுது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு மாலை 05.33 மணிக்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது.

மேலும் திருநெல்வேலி நகர்பகுதியில் 15 எண்ணம் தாழ்வழுத்த மின்கம்பங்கள் மற்றும் 1 எண்ணம் உயரழுத்த மின்கம்பம், 1 எண்ணம் 250 கேவிஏ மின்மாற்றியும் பலத்த காற்றுடன் மழை பெய்த காரணத்தினால் பழுதடைந்துள்ளது. அதில் 4 தாழ்வழுத்த மின்கம்பங்கள் 15ம் தேதி நேற்று இரவே சரிசெய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மின்கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதிப்பால் 493 மின்நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டனர். சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று மாலைக்குள் அனைத்து பணிகளும் சரி செய்யப்பட்டு சீரான மின்விநியோகம் வழங்கப்படும். 

மேலும் சிந்துபூந்துறை பகுதியில் உள்ள மின் மயானத்திற்கும் மாலை 05.33 மணிக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. அந்த பகுதிக்கு அடுத்து உள்ள உயரழுத்த மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பழுது அடைந்த மின் கம்பம் மாற்றும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. ஆகையால் அதற்கு அடுத்து உள்ள பகுதிகளுக்கு வேறு மின் மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை பகுதியில் 15.05.2025 அன்று மட்டும் 9 சடலங்கள் எரிவாயு தகன மேடை மூலம் எரியூட்டப்படுவதற்காக வரபெற்றது. அதில் 2 சடலங்கள் மின்தடை ஏற்படுவதற்கு முன்பாகவே தகனம் செய்யப்பட்டுவிட்டது. காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மின் மயானத்தில் மாலை எரிவாயு தகன மேடையில் மின்தடை ஏற்பட்டதால், இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மாலை கொண்டுவரப்பட்ட 7 சடலங்கள் எரிவூட்டுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. மாலை மின்சாரம் பெறப்பட்டதும் நேற்று இரவுக்குள் அனைத்து சடலங்களும் எரிவூட்டபட்டன. இப்பகுதியில் திடீர் என்று பலத்த காற்றுடன் மழை பெய்த காரணமாக சிறிது நேரம் ஏற்பட்ட மின் தடையினை மின்சார ஊழியர்கள் வரப்பெற்று மின் தடையினை உடனடியாக சரி செய்தனர்.

அரசு பருமழையினை முன்கூட்டியே அறிந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோடைமழை மற்றும் காற்று தீடிரென ஏற்பட்டதால் அதனை கணிக்கமுடியாததால் மின்தடை நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு துரிதமான நடவடிக்கையினை மேற்கொண்டு சரிசெய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். 

ஆய்வில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜீ , முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் , தலைமை பொறியாளர் திருநெல்வேலி மண்டலம் (பொ) லதா , மேற்பார்வை பொறியாளர் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் அகிலாண்டேஸ்வரி , செயற்பொறியாளர் (பொது) திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் வெங்கடேஷ் மணி , செயற்பொறியாளர் (பொ) பகிர்மானம் நகரியம் திருநெல்வேலி ஜெயசீலன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory