» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு

புதன் 12, ஜூன் 2024 9:59:31 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் பள்ளி மாணவர், மாணவியர்களுக்காக 30 பள்ளி விடுதிகளும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 4 அரசு கல்லுரி விடுதிகள் ஆக 34 விடுதிகள் அனைத்து வட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: மேற்படி பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும், கல்லூரி /பாலிடெக்னிக்/ ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் / ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவர் , மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

•பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

•மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திற்கு 8 கி.மீ க்கு அப்பால் இருக்க வேண்டும். ( மாணவியருக்கு இவ்விதி பொருந்தாது)

பள்ளி விடுதிகள் செயல்படும் இடங்கள்: தூத்துக்குடி, கழுகுமலை, கோவில்பட்டி, காயாமொழி, நாலுமாவடி, வெள்ளாளன்விளை, கீழராமசாமிபுரம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், வீரபாண்டியபட்டிணம், மணப்பாடு, பணிக்கநாடார்குடியிருப்பு, விளாத்திகுளம், கே.தங்கம்மாள்புரம், புதூர், சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டை, ஆனந்தபுரம், படுக்கப்பத்து, கருங்குளம், எட்டயபுரம், சுப்பம்மாள்புரம், ஓட்டப்பிடாரம், பெரியசாமிபுரம் மற்றும் கயத்தார் பகுதிகளில் இயங்குகின்றன.

கல்லூரி விடுதிகள்: தூத்துக்குடி-போல்டன்புரம் (ம) தாளமுத்து நகர், கோவில்பட்டி, நாகம்பட்டி ஆகிய இடங்களில் விடுதிகள் செயல்படுகின்றன.

விடுதிகளில் வழங்கப்படும் சலுகைகள்: தினசரி நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் மற்றும் 1 ஆங்கில நாளிதழ்கள் நூலகப் புத்தகங்கள் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

4 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள் வழங்கப்படுகிறது. 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர், மாணவியருக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிகாட்டிகள் நூல்கள் வழங்கப்படுகிறது.

அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் காற்றோட்டத்துடன் கூடிய தங்குமிடம் (ம) இறைச்சி, முட்டையுடன் கூடிய சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும், விடுதிகளில் வண்ணத்தொலைக்காட்சிபெட்டி, விளையாட்டு உபகரணங்கள், நீர் சுத்திகரிப்பு கருவி, புத்தக அலமாரி, இன்வெர்ட்டர் கருவி, இரண்டடுக்கு கட்டில்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாய்கள், கல்லூரியில் பயில்பவர்களுக்கும் ஜமக்காளம் மற்றும் போர்வை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய மாணவ, மாணவியர்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினிகளிடத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு 20.06.2024 வரையும் , கல்லூரி விடுதிகளுக்கு 15.07.2024 வரையும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் விடுதியில் சேரும் நேரத்தில் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். ஓவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

எனவே, வறுமை நிலையில் வசிக்கும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிற்றலை தவிர்த்து அரசின் சலுகைகளை அனுபவித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அனைத்து பிரிவினரும் கட்டாயம் கல்வி கற்பதற்கு அவர்களது பெற்றோர் / பாதுகாவலர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory