» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வளர்ச்சியடைந்த மாநகரமாக தூத்துக்குடி உருவாகும் : மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!

செவ்வாய் 28, நவம்பர் 2023 4:01:22 PM (IST)



"எதிர்காலத்தில் சென்னையை போல் வளர்ச்சியடைந்த பெரிய மாநகரமாக தூத்துக்குடி உருவாகும்" என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி ஏபிசிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டன. 

அதில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். ஓவியப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு வழங்கி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மாநகராட்சி முழுவதும் தூய்மையான நகரை உருவாக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு முக்கியமான நகரங்களிலும் மாசு பற்றிய தகவல்கள் கணக்கெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும். அதில் நமக்கு ஒரு சவாலாக இருந்தது. 

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் நிறைந்த கட்டமைப்புகள் உள்ள நகரமாக விளங்கும் தூத்துக்குடியில் அதையெல்லாம் போக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் மரக்கன்றுகளும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 60 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டு, மாநகர் பகுதி முழுவதும் எங்கெல்லாம் தேவைப்படும் இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 

பல பள்ளிகளும் அடங்கும். மாநகர மக்கள் சுத்தமான சுகாதாரமான காற்றை சுவாசிக்கும் வகையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் இடங்களில் மரக்கன்று நட வேண்டும் என்றால் அதையும் வழங்கி தினசரி மாநகராட்சி சார்பில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. கடந்த காலங்களில் பெய்த மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு பெரிய அளவில் பாதிப்பில்லை. கடற்கரை பகுதியிலும் சில தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

பல்வேறு நடவடிக்கையின் மூலம் உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 8 மாத காலமாக அந்த பணி நடைபெறுகிறது. கோரம்பள்ளத்தில் இருந்து தூத்துக்குடி மாநகருக்கு கொண்டு வரப்பட்ட பக்கிள் ஓடை திட்டம் மழை காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால், பக்கிள் ஓடையும் சீர்கெட்டது. 

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியில் தினமும் 1000 பேர் அதிகாலை 5 மணி முதல் பணியாற்றி தினமும் 150 டன் குப்பைகளை அனைத்துப் பகுதிகளிலும் சேகரிக்கின்றனர். அதை உரக் கிடங்கு உள்ள 588 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக, மீன் மார்க்கெட் பகுதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துகிறார்கள். அதையும் 90 சதவீதம் முறைப்படுத்தி விட்டோம். 3 வேளையும் நாம் உணவருந்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையோடு வாழ்கிறோம். 

அதேபோல், மாசு இல்லாத மாநகராட்சி உருவாக வேண்டும் என்பதில் உங்களுக்கும் அக்கறை இருக்க வேண்டும். நானும் ஒருகாலத்தில் வாகனத்தில் செல்லும்போது, உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு, சாலையில் வீசி விட்டுச் செல்வேன். இப்போது, அதன் பாதிப்பை எல்லாம் தெரிந்து கொண்ட நான் உணர்ந்து கொண்டேன். எதிர்கால தலைமுறையினராகிய நீங்கள் நமது நகரம் - நமது தூய்மை என்பதை கடைப்பிடிக்க வேண்டும். நெகிலி கழிவுகளை தவிர்க்கும் பொருட்டாக மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பல லட்சம் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டுள்ளன. 

சென்னையை போல் எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த பெரிய மாநகரமாக தூத்துக்குடி உருவாகும் நிலை வரும். நாம் அனைவருமே இணைந்து மாசு இல்லாத மாநகரை உருவாக்க பாடுபட வேண்டும் என்று பேசினார்.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளியில் தாளாளர் கணபதி, பள்ளி முதல்வர் கோமதி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர் உள்பட பல்வேறு பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து

சாமிNov 30, 2023 - 10:01:58 AM | Posted IP 172.7*****

நல்ல குடிநீர் இல்லை அத முதல்ல பாருங்கள்

TN69Nov 28, 2023 - 10:35:02 PM | Posted IP 172.7*****

நகராட்சி அளவில்தான் உள்ளது தூத்துக்குடி. மற்ற மாநகராட்சிகள் மற்றும் சென்னையுடன் ஒப்பிடுவதை விடுத்து, மாநகர சாலைப் போக்குவரத்து, மாநகரபஸ்கள் 60 வார்டுகள் வாரியாக இயக்குதல், 4 மண்டலம் வாரியாக தபால் அலுவலகங்கள், காவல் ஆணையர் அலுவலகங்கள், ஏடிஎம் எண்ணிக்கை உயர்த்துதல், மாநகர சாலைகளை விரிவாக்கம் செய்தல், பாஸ்போர்ட் அலுவலகங்கள், இரயில்வே கேட் உள்ள இடங்களில் சுரங்க பாதை அல்லது மேம்பாலம் கட்டுதல், ஆக்கிரமிப்புகளை இடித்தகற்றி சரியான அளவுகளில் சாலை அமைத்தல், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தல், மழைநீர் பாதாள சாக்கடை 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றி அமைத்தல், சாலையோர மண் குப்பைகளை இரவு நேரத்தில் சுத்தம் செய்தல், ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரி அமைத்தல், மணிக்கு ஒருமுறை நெல்லை மற்றும் திருச்செந்தூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு இரயில்கள் இயக்குதல், நகர்புற சுகாதார மையங்கள் 60 வார்டுக்கும் அமைத்தல் முதலியன,,,,,,,,, நீங்கள் செய்தால் பார்க்கலாம் நம்மாநகரம் சென்னை போல வளருகிறதா என்று??????????

பெயர் வெளியிட விரும்பாத நபர்.Nov 28, 2023 - 04:10:29 PM | Posted IP 172.7*****

சென்னை போன்று வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பெரிய அளவில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். ரயில் போக்குவரத்து வசதி பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டும்.துறைமுகம் பகுதியில் இருந்து எப்போதும் அங்கு நகரம் போன்ற கட்டமைப்பு வேண்டும் அது இல்லாமல் தூத்துக்குடி பெரிய அளவில் வளர முடியாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory