» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது: ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 8:07:09 PM (IST)



மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். 

எட்டயபுரம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000  வழங்கிடும்  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும் போது, "பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 15.09.2023 அன்று மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களால்  சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திட உதவி மையத்தினை அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  2 உதவி மையங்களும், 

தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகங்களில் தலா 1 உதவி மையமும் மற்றும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவி மையங்களும், ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 உதவி மையங்களும், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், 

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும்,கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவி மையங்களும் என மொத்தம் 44  உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட உதவி மையங்களை அணுகி தங்கள் விண்ணப்பங்களின் நிலையினை அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட அலுவலகங்களில் நடைபெற்று வரும் இம்முகாம் வருகின்ற 30.09.2023 வரை நடைபெறும். மேலும், தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என கருதும் மகளிர்கள் குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். அப்படி மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

மேலும், தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது. மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம் என்றார். இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory