» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!

திங்கள் 15, ஜனவரி 2024 9:20:50 AM (IST)



டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடினார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வைத்தபோது எடுத்த படம். அருகில் மத்திய அமைச்சர் எல்.முருகன், நடிகை மீனா உள்ளிட்டோர் உள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) உலகத்தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மத்திய மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வீடு காமராஜர் சாலையில் உள்ளது. இங்கு நேற்றைய தினமே பொங்கல் தின கொண்டாட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்படி நேற்று காலை அங்கு பொங்கல் விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காலை 11 மணி அளவில் வேட்டி, முழுக்கோட்டு மற்றும் சால்வை அணிந்து அங்கு வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன், அவரது மனைவி டாக்டர் கலையரசி, மகன் எம்.கே.இந்திரஜித் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, விழா அரங்கத்துக்கு செல்லும் வழியில் கோமாதா பூஜை செய்தார். தொடர்ந்து புது பொங்கல் பானையில் சர்க்கரை தூவி பொங்கலிட்டு மகிழ்ந்தார். பின்னர் விழா அரங்கத்துக்கு சென்றார். அவருக்கு, அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிமுகம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து பிரதமர், மேடையேறி பொங்கல் வாழ்த்துரை ஆற்றினார்.

"வணக்கம், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என தமிழில் உரையைத் தொடங்கிய அவர், தொடர்ந்து இந்தியில் உரையைத் தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பண்டிகை குதூகலம் வெளிப்படுவதை காணலாம். அனைத்து குடிமக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மனநிறைவு ஆகியவற்றின் தொடர்ச்சியான ஓட்டம் தொடர வேண்டும்.

பொங்கல் விழாவுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றி. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளே தேசத்தின் ஆணிவேராக உள்ளனர். ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் வெகுசிறப்பாக வரையறை செய்துள்ளார்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” என்ற அவரது சீரிய சிந்தனை எக்காலத்துக்கும் ஏற்புடையதே. நாட்டு மக்களின் தேவைக்கு குறையாத விளைபொருட்களை உற்பத்தி செய்து தரும் உழவர்களும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையோரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும் என்பதை நெஞ்சில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது திருவிழாக்கள் அனைத்தும் ஆழ்ந்த அர்த்தமுடையவை. விவசாயிகளை போற்றக்கூடியவை. பொங்கல் திருநாள் உழவர்களின் மாட்சியை உலகிற்கு உணர்த்தும் உன்னத நன்னாளாகும். கடந்த வருடம் சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டது. நமது பாரதத்தில் 3 கோடி உழவர்கள் சிறுதானியங்களை விளைவித்து வருகிறார்கள். சிறுதானியங்களின் பயன்பாட்டை மேலும் உயர்த்துவோம். எதிர்காலத்தில் இது மேலும் பெருக வழிவகை செய்வோம்.

சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க சங்கல்பம் மேற்கொண்டுள்ளோம். இதை நனவாக்க அயராது உழைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும் பிரதமர் தனது பேச்சின்போது, தமிழ்ப்பெண்கள் கோலமிடுவதை சுட்டிக்காட்டி பல புள்ளிகள் இணையும் கோலத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒப்பிட்டு பேசினார். ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் தேசிய உணர்வை பொங்கல் பண்டிகை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory