» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம்: உச்சநீதிமன்றம் அனுமதி

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:27:44 AM (IST)

தமிழக இந்து கோயில்களில் முழுமையாக அறங்காலவா்களை நியமிக்க தமிழக அரசுக்கு மேலும் 6 மாத அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுமாா் 38,000 கோயில்களில் முறையாக அறங்காவலா்களை நியமிக்க கோரியும், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, சஞ்சய்குமாா் அமா்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் குமணன், அறங்காவலா்கள் நியமனம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கினாா். இது ஒரு விரிவான நடவடிக்கை. வருமானம் இல்லாத கோயில்கள், பரம்பரையாக உள்ள அறங்காவலா்கள் மற்றும் பரம்பரையற்ற அறங்காவலா்களைக் கொண்ட கோயில்கள் என உள்ளன. இதை விரிவாக ஆய்வு செய்து நியமனங்களை மேற்கொள்ள சில மாதங்கள் அவகாசம் தேவை என வழக்கறிஞா் குமணன் கேட்டுக் கொண்டாா்.

‘சுமாா் 37, 145 கோயில்களில் 18,806 கோயில்களில் அறங்காவலா் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18,339 கோயில்களில் நியமனத்திற்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள சுமாா் 4 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலா் குழுக்களை நியமிக்க கால அவகாசம் தேவை’ என அவா் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மூன்று மாதங்களுக்கு அவகாசம் அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா். ஆனால், ஆறு மாத அவகாசம் தேவை என்று தமிழக அரசு வழக்கறிஞா் கேட்டுக் கொண்டாா். இதை ஏற்று ஆறு மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள 30,311 இந்து கோயில்களுக்கு அறங்காவலா்களை நியமிப்பது தொடா்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 27,362 கோயில்களுக்கு அறங்காவலா் தொடா்பான அழைப்பாணை விடுத்தும் எந்தவொரு விண்ணப்பமும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மீண்டும் புதிய அழைப்பு விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள 6,420 கோயில்களில் அறங்காவலா்கள் உள்ளனா். அதில் பரம்பரை அறங்காவலா்கள் 3,471பேரும் பரம்பரை அறங்காவலா்வல்லாதோா் 2,949 பேரும் உள்ளனா் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory