» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி சீரமைப்புப் பணிக்காகத் தனது முதல் மாதச் சம்பளத்தை வழங்கினார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ!

வெள்ளி 26, ஜூன் 2026 8:15:08 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தாமிரபரணி ஆற்றில் முள்செடிகளை அகற்றும் பணியில் பழுதாகிக் கிடந்த இயந்திரத்தைச் சீரமைப்பதற்காகத் தனது முதல் மாதச் சம்பளத் தொகையை வழங்கியுள்ளார்.

கடந்த 2023 டிசம்பர் மாத வெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்க ஆற்றுப் படுகைகளில் மண்டி கிடக்கும் முள்செடிகளை அகற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஏற்பாட்டில், 2024 ஜூலை மாதம் கனிமொழி எம்பி அவர்களால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. எக்ஸ்னரோ நிறுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒருங்கிணைப்பில் மருதூர் அணை, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் வெற்றிகரமாக நடந்தன.

நிதி நெருக்கடி ஏற்பட்ட போது தற்போதைய மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கிவிட்டார். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை 12 கி.மீ தொலைவு சீரமைக்கப்பட்டது. இதன் காரணமாக 2025 வெள்ளத்தின் போது எந்தப் பாதிப்பும் இன்றித் தண்ணீர் கடலுக்குச் சென்றது. தற்போது மாவட்டத்தில் ஆற்றில் மூன்றில் இரண்டு பங்கு முள்செடிகள் அகற்றப்பட்டுவிட்டன.

தற்போது கேமலாபாத் அருகில் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வந்த வாடகை இல்லா இயந்திரம் திடீரென பழுதானது. அதனைப் பழுதுநீக்க ரூ.1 லட்சம் வரை தேவைப்பட்டதால் பணிகள் தற்காலிகமாக முடங்கின.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் சித்திரைவேல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சரவணனிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சரவணன், தனது முதல் மாதச் சம்பளத் தொகையை அப்படியே தாமிரபரணி பணிக்கு வழங்கினார். அதில் முதற்கட்டமாக ரூ.80 ஆயிரத்தை இயந்திரத்தைப் பழுதுநீக்குவதற்காக ஓட்டுநர் துரையிடம் வழங்கினார்.

தற்போது இயந்திரம் பழுதுநீக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதால், அடுத்த வாரம் மீண்டும் தாமிரபரணியில் தூய்மைப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதல் மாதச் சம்பளத்தை மக்கள் பணிக்காக வழங்கிய எம்.எல்.ஏ சரவணனைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory