» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டாசு ஆலைகளை அடித்து விரட்டுவோம்: 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
புதன் 24, ஜூன் 2026 3:37:06 PM (IST)
கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் புதிதாகப் பட்டாசு ஆலைகளைத் தொடங்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டப் பட்டாசு ஆலைகள் மீதான கடுமையான நெறிமுறைகள் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட எல்லையோரக் கிராமங்களான கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் புதிதாகப் பட்டாசு ஆலைகளைத் தொடங்க உரிமையாளர்கள் முயன்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள உற்பத்தியாளர்கள், தங்களது ஆலைகளைத் தூத்துக்குடி மாவட்ட எல்லையோர கிராமங்களான கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டாரங்களுக்கு மாற்றப் புதிய கட்டிடங்களை அமைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து அரங்கேறும் விதிமீறல்கள், தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி, இப்பகுதிகளில் புதிய ஆலைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் விவசாயிகளும் போராட்டக் களத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்ராசாபட்டி, மாசார்பட்டி, கருப்பூர், இனாம் அருணாச்சலபுரம், கீழக்கரந்தை ஆகிய கிராமங்களில் முறையான முன்னறிவிப்பின்றி, 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கிராம உதவியாளர்கள் மூலம் பட்டாசு உற்பத்தி ஆதரவுக் கருத்துக்கேட்புப் படிவங்களில் முறைகேடாகக் கையொப்பம் பெறப்பட்டு வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே, எட்டயபுரம் தாலுகா கருப்பூர் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்தார். அப்போது ஆலையின் தளவாடப் பொருட்கள் 2 கி.மீ. சுற்றளவுக்குச் சிதறி விழுந்து பீதியை ஏற்படுத்தின. அதேபோல, கடந்த 20-ஆம் தேதி அயன்ராசாபட்டியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயமடைந்தனர். இச்சம்பவங்களால் ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர்.
விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை:
இதுகுறித்து எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், "மானாவாரி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இப்பகுதிகளில் புதிய பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
சில மத்திய-மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். மக்கள் எதிர்ப்பை மீறி கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்தில் பட்டாசு உற்பத்திக்கு அனுமதி அளித்தால், மக்களை ஒன்றுதிரட்டி பட்டாசு ஆலைகளை அடித்து விரட்டுவோம்" என எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

பேய்குளம் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை!!
புதன் 24, ஜூன் 2026 8:24:07 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: இருவர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:56:37 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு நகரமாக்கப் புதிய திட்டம்: மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை!
புதன் 24, ஜூன் 2026 5:41:11 PM (IST)








