» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!

புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சம் மற்றும் அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என்று திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீதான மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆதாரங்களுடன் முன்வைத்து நியாயமான கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் உரிய பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம்.

ஆனால், முதலமைச்சருக்கான மாண்புகளை மறந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் பிதற்றல்களை மட்டுமே முதலமைச்சர் விஜய் சபையில் முன்வைத்துள்ளார். மாநிலத்தில் ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்குப் பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். பாஜகவுடன் இணக்கமாக இருந்துகொண்டு, திமுகவை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் தவெகவின் பின்னணி என்ன என்பது அம்பலமாகியுள்ளது. திமுக இத்தகைய வெற்று வாய்ச்சவால்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் இருந்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சட்டமன்றத்தில் ஏளனமாகத் தனிநபர் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சபையில் இல்லாத ஒரு தலைவரைப் பற்றி இதுவரை சட்டமன்றத்தில் இவ்வளவு அநாகரிகமாக யாரும் பேசியதில்லை. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளைத் தவெகவிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சட்டமன்றத்திற்கென்று உள்ள தனி மாண்பை மறந்து, அதைச் சிரித்து விசிலடிக்கும் பொழுதுபோக்கு மன்றமாக முதலமைச்சர் விஜய் மாற்றிவிட்டார். அங்கு அமைச்சர்கள் டூயட் பாடல்களுக்கு ஆடுகிறார்கள், எம்எல்ஏக்கள் விசில் அடிக்கிறார்கள், முதலமைச்சர் நாடகத்தை அரங்கேற்றுகிறார். தங்களது தலைவரின் உத்தரவின் பேரிலேயே திமுகவினர் கண்ணியத்துடன் விமர்சிப்பதாகவும், தவெக பாணியில் பேசத் தெரியாமல் இல்லை என்றும் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory