» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: ஆட்சியர் பங்கேற்பு

வியாழன் 2, ஏப்ரல் 2026 10:39:06 AM (IST)



தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் தலைமையில் அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்டத் தேர்தல் ஆணையம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுப் நடைப்பயணம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் தொடங்கியது. 

இதில் வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட 28 துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர். பேரணியின் தொடக்கமாக, அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்பதற்கான வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்ட இந்தப் பேரணி, பாளையங்கோட்டை சாலை, பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கே. இளம்பகவத், வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட வளர்ச்சி முகமை உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு "நமது வாக்கு, நமது உரிமை" என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory