» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஐ.ஐ.டி. அமைக்க நடவடிக்கை : அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி உறுதி

வியாழன் 28, மார்ச் 2024 8:20:25 AM (IST)



இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தூத்துக்குடியில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவரை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வந்து வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட தொடங்கி உள்ளார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று காலையில் தூத்துக்குடி ரோச் பூங்காவுக்கு சென்றார். அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி  அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது, நான் இந்த மண்ணின் மைந்தன். எனக்கு ஆதரவு தந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். எடப்பாடியார் முதல்-அமைச்சராக இருந்த போது ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து உள்ளார். தொடர்ந்து அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தார். இதனால் 1000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் டாக்டராகி உள்ளனர். அதே போன்று சென்னையில் ஐ.ஐ.டியும், திருச்சியில் ஐ.ஐ.எம். உயர்கல்வி நிறுவனமும் அமைந்து உள்ளன. தென்மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அங்கு சென்று படிக்க மிகுந்த பொருட்செலவாகிறது. இதனால் தென்மாவட்ட இளைஞர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகையால் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக தூத்துக்குடியில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார்.

மேலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கான மானியத்தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தூத்துக்குடி துறைமுக நகரமாகவும், தொழில் நகரமாகவும் உள்ளது. இங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தூத்துக்குடி-மதுரை தொழில் வழித்தடத்தில் கனரக தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். 

தூத்துக்குடியில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுப்பேன். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கிராமப்புறங்களில் இருந்து பேரூராட்சி மக்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜி.எஸ்.டி வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். அரிசிக்கான 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தூத்துக்குடி மாவட்டத்தில் மீன், இறால், கோழி பண்ணைக்கு 50 சதவீதம் மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இரா.ஹென்றி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் பெருமாள்சாமி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் தனராஜ், மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளர் சுதாகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருச்சிற்றம்பலம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory