» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி: ‘இந்தியா’ அணி 235 தொகுதிகளை கைப்பற்றியது

புதன் 5, ஜூன் 2024 8:56:15 AM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 292 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கிறது. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி 235 தொகுதிகளை கைப்பற்றியது.
புதுடெல்லி,ஜூன்.5-

இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகித்தனர். மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதா கட்சியே கைப்பற்றும் நிலையில் இருந்தன.

அதே நேரம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியும் பல இடங்களில் முன்னிலை வகித்தது. இரு கூட்டணிகளும் பல இடங்களில் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இதனால் மும்பை பங்குச்சந்தை வர்த்தகமும் பெரும் சரிவை எதிர்கொண்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா மட்டும் 239 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதேபோல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுமார் 7½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.அதே நேரம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 98 இடங்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 16 இடங்களை பிடித்துள்ளன.

வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி, 2 தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றியை பெற்றார். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு யாரும் எதிர்பாரத வகையில் உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.இதேபோல் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றியுள்ளது.

எப்போதும்போல் தமிழகத்தின் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர், தர்மபுரி தொகுதிகளில் மட்டும் முன்னணி நிலவரம் மாறி மாறி வந்தது. முடிவில் அந்த 2 தொகுதிகளும் தி.மு.க. கூட்டணி வசம் சென்றன.

இதேபோல் பலரும் எதிர்பார்த்து இருந்த கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் தி.மு.க.வே வெற்றி பெற்றது. புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தனித்து 239 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.

எனவே பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பா.ஜனதா இன்று (புதன்கிழமை) கூட்டியுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது.

கடந்த 1-ந்தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜனதா கூட்டணிக்கு 350 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 125 இடங்களே கிடைக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள், அந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.அதே நேரம் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதுபோல் 40 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory