» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரு மாதத்திற்குப் பிறகு வெற்றி : ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

வெள்ளி 26, ஏப்ரல் 2024 11:50:10 AM (IST)



தொடர்ந்து 6 போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அணி நேற்று வெற்றியை பதிவு செய்தது.  அதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு 2வது வெற்றியை ஈட்டியுள்ளது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. ஐதராபாத் ராஜிவ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் டுபிளசி 'பேட்டிங்' தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு விராத் கோலி, டுபிளசி (25) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. வில் ஜாக்ஸ் (6) ஏமாற்றினார். மயங்க் மார்கண்டே வீசிய 11வது ஓவரில் வரிசையாக 4 சிக்சர் உட்பட 27 ரன் விளாசிய படிதர், 19 பந்தில் அரைசதம் எட்டினார். 

மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது உனத்கட் பந்தில் படிதர் (50) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கோலி (51), தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். மஹிபால் லாம்ரர் (7), தினேஷ் கார்த்திக் (11) சோபிக்கவில்லை. நடராஜன் வீசிய கடைசி ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஸ்வப்னில் சிங் (12) கடைசி பந்தில் அவுட்டானார். பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது. கிரீன் (37) அவுட்டாகாமல் இருந்தார்.

சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் (1) ஏமாற்றினார். அபிஷேக் சர்மா (31) ஆறுதல் தந்தார். ஸ்வப்னில் சிங் பந்தில் மார்க்ரம் (7), கிளாசன் (7) அவுட்டாகினர். கரண் சர்மா 'சுழலில்' நிதேஷ் குமார் ரெட்டி (13), அப்துல் சமத் (10) சிக்கினர். ஸ்வப்னில் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் கம்மின்ஸ் (31) ஓரளவு கைகொடுத்தார். கிரீன் பந்தில் புவனேஷ்வர் குமார் (13) அவுட்டானார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 171 ரன் மட்டும் எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷாபாஸ் அகமது (40), உனத்கட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில், கரண் சர்மா, கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் விளாசிய பெங்களூரு வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை (தலா 19 பந்து) ராபின் உத்தப்பாவுடன் (எதிர்: பஞ்சாப், 2010) பகிர்ந்து கொண்டார் ரஜத் படிதர். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (17 பந்து, எதிர்: புனே, 2013) உள்ளார். ஐ.பி.எல்., அரங்கில் 100வது போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 5வது பவுலரானார் உனத்கட் (3/30). முதலிடத்தில் டில்லியின் அமித் மிஸ்ரா (4/11, எதிர்: பஞ்சாப், 2016) உள்ளார்.

வெற்றிக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ், "தோற்றுத் தோற்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றிக்குப் பிறகு எப்படிப் பேசுவது என்பதையே மறந்து விட்டேன்" என்று சூசகமாக ஒரு ஜோக்கடித்தார்.

"பிரசெண்டேஷனில் எப்படி பேசுவது என்பதையே மறந்து விட்டேன். ஒவ்வொரு போட்டியின் முடிவின் போதும் ஏதோ பேசி விட்டு சென்று விடுவேன். முந்தைய சன் ரைசர்ஸ் போட்டியிலும் 260 வரை வந்தோம், கொல்கத்தாவிடம் 1 ரன்னில் தோற்றோம். நெருக்கமாக வருகிறோம். ஆனால் வெல்ல முடியவில்லை. அணி வீரர்களிடத்தில் நம்பிக்கையை வரவழைக்க வேண்டுமெனில் அதற்கு வெற்றிதான் ஒரே வழி.

தோல்விகளை அடைந்து கொண்டே போலியாக நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்க முடியாது. தோல்வி நம் மனநிலையை பாதிக்கும். இதுவரை 50% - 60% ஆற்றலுடன் தான் ஆடினோம். இது நம்பிக்கை அளிக்க போதுமானதல்ல. ரஜத் படிதார் அடுத்தடுத்து அரைசதம் அடித்தது அவருக்கு நல்ல நிறைவையளித்திருக்கும்.” என்றார் டுபிளெசிஸ்.

கம்மின்ஸ் பேசும்போது, "சேஸிங்கில் அதிக விக்கெட்டுகளை மடமடவென்று இழந்தோம். இந்தத் தோல்வி குறித்து அதிகம் யோசிக்க விரும்பவில்லை. நாங்கள் இப்படி பேட் செய்வதுதான் எங்களுக்குப் பொருத்தமாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் இது தகையாது. ஆனால் இதுதான் எங்கள் வழி, அதிரடிதான் எங்கள் முறை” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory