» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் : வரலாற்று சாதனை படைத்த பும்ரா!

சனி 3, பிப்ரவரி 2024 5:45:13 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி அசத்தினார்.

முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

முன்னதாக இந்த போட்டியில் இந்திய வீரர் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 150 ஆக பதிவானது. இதன் மூலம் பும்ரா வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் 

1. ஜஸ்பிரித் பும்ரா - 6781 பந்துகள்

2.உமேஷ் யாதவ் - 7661 பந்துகள்

3.முகமது ஷமி - 7755 பந்துகள்

4. கபில் தேவ் - 8378 பந்துகள்

5. அஸ்வின் - 8380 பந்துகள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory