» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

என்னைப் பொறுத்தவரையில்,கோலி ஆட்ட நாயகன் அல்ல: கவுதம் கம்பீர்

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 4:11:32 PM (IST)



என்னைப் பொறுத்தவரையில்,பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில்,  விராட் கோலி ஆட்ட நாயகன் அல்ல என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் என்னை பொறுத்தவரை உண்மையான ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் தான் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ். அவரைத் தாண்டி நீங்கள் பார்க்க முடியாது". விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது.

அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக, ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory