» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்

வியாழன் 31, ஆகஸ்ட் 2023 12:23:39 PM (IST)



16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் முல்தான் நகரில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் பாகிஸ்தான் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் சோ்க்க, அடுத்து நேபாளம் 23.4 ஓவா்களில் 104 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட் செய்யத் தீா்மானித்தது. ஃபகாா் ஜமான் 3 பவுண்டரிகளுடன் 14, இமாம் உல் ஹக் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற, 25 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

ஒன் டவுனாக வந்த கேப்டன் பாபா் ஆஸம் - நான்காவது பேட்டராக வந்த முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயா்த்தினா். 3-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் சோ்க்க, அதில் முதலாவதாக ரிஸ்வான் பிரிக்கப்பட்டாா். 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்திருந்தபோது அவா் ரன் அவுட் ஆனாா்.

அடுத்து வந்த அகா சல்மான் 5 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளித்தாா். 6-ஆவதாக களம் புகுந்த இஃப்திகா் அகமது, கேப்டனுடன் இணைந்தாா். இருவரும் நேபாளத்தின் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக சிதறடித்து ரன்கள் குவிக்கத் தொடங்கினா்.

அவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சோ்த்து அபாரமாக ஆடியது. இதில் முதலில் பாபா் ஆஸம் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 151 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த ஷாதாப் கான் 1 பவுண்டரியுடன் இன்னிங்ஸின் கடைசி பந்தில் வெளியேறினாா்.

முடிவில் இஃப்திகா் அகமது 71 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். நேபாளத்தின் பௌலிங்கில் சோம்பால் கமி 2, கரன் கே.சி., சந்தீப் லேமிஷேன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 343 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய நேபாளத்தில் ஆரிஃப் ஷேக் 5 பவுண்டரிகளுடன் 26, சோம்பால் கமி 4 பவுண்டரிகளுடன் 28, குல்சன் ஜா 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, இதர விக்கெட்டுகள் தகுந்த இடைவெளியில் ஒற்றை இலக்க ரன்னிலேயே அடுத்தடுத்து வீழ்ந்தன.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாதாப் கான் 4, ஹாரிஸ் ரௌஃப், ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோா் தலா 2, நசீம் ஷா, முகமது நவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

214 இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் பாபா் ஆஸம் - இஃப்திகா் அகமது கூட்டணி 214 ரன்கள் சோ்த்ததே ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்பில் அதிகமாகும். முன்னதாக, யூனிஸ் கான் - உமா் அக்மல் 176 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

85 நேபாள பௌலா் சோம்பால் கமி, பாகிஸ்தான் இன்னிங்ஸில் 85 ரன்கள் கொடுத்ததே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு நேபாள பௌலரின் அதிகபட்சம். இதற்கு முன் அவரே 81 ரன்கள் கொடுத்தது அதிகபட்சமாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory