» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா - வங்கதேசம் மகளிர் அணி கேப்டன்கள் மோதல்: நடந்தது என்ன?

திங்கள் 24, ஜூலை 2023 5:05:25 PM (IST)

வங்கதேச அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்தும், வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானும் மோதிக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டையில் முடித்தது. இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் ’டை’ ஆனது.

பொதுவாக, ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது வழக்கம். ஆனால், போட்டியை நடத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி ‘டை’யில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததால், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.

இந்நிலையில், ஆட்டத்துக்குப் பிறகு கோப்பையை பகிர்தளிக்கும் நிகழ்வின்போது, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத், "ஏன் இங்கே தனியாக இருக்கிறீர்கள்? நடுவர்களை அழைத்து வாருங்கள். நீங்கள் போட்டியை ‘டை’ செய்யவில்லை. நடுவர்கள் உங்களுக்காக அதைச் செய்தார்கள். அவர்களை அழைக்கவும். அவர்களுடன் புகைப்படம் எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்று வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானிடம் கூறினார்.

இதனால் கோபமடைந்த சுல்தானா, இந்திய அணியுடன் புகைப்படம் எடுக்காமல் தனது அணியுனருடன் வெளியேறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதன் பிறகு பேசிய ஹர்மன்பிரீத், ”இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு இங்கு நடுவர்கள் நடந்து கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்துக்கு வரும்போது இந்த வகையான நடுவரை சமாளித்து, அதற்கேற்ப எங்களை தயார்படுத்திக் கொள்வோம். நடுவர்கள் அளித்த சில முடிவுகளால் மிகவும் ஏமாற்றமடைந்து உள்ளோம்” என்றார்.

வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா பேசும்போது, "இது முழுக்க முழுக்க ஹர்மன்பிரீத்தின் பிரச்சினை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்லபடியாக நடந்திருக்க வேண்டும். ஒரு வீராங்கனையாக அவர் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory