» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ் சாம்பியன்!

திங்கள் 17, ஜூலை 2023 5:43:29 PM (IST)


விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் வென்றுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 7 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) கோதாவில் குதித்தனர். எதிர்பார்த்தபடியே முதல் வினாடியில் இருந்தே களத்தில் அனல் பறந்தது.

தொடக்கத்திலேயே அல்காரசின் இரு சர்வீஸ்களை முறியடித்த ஜோகோவிச் முதல் செட்டை அதிக சிரமமின்றி கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி மட்டையை சுழற்றியதால் டைபிரேக்கர் வரை சென்றது. ஒரு வழியாக டைபிரேக்கரில் அல்காரஸ் வென்றார். 3-வது செட்டில் அல்காரசின் கை ஓங்கியது. இதனால் நெருக்கடிக்குள்ளான ஜோகோவிச் பந்துகளை அதிகமாக வெளியே அடித்துவிட்டு தவறுகளை இழைத்தார். 

ஆனாலும் 5-வது கேமில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்ததால் அந்த கேம் மட்டும் இழுபறியாக 27 நிமிடங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தியது. அந்த கேமை அல்காரஸ் தனக்குரியதாக மாற்றியதும் செட்டும் அவரது கைக்குள் அடங்கியது. இருப்பினும் மனம் தளராமல் மல்லுக்கட்டிய ஜோகோவிச் 4-வது செட்டை வசப்படுத்தி சுடச்சுட பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது செட்டுக்கு நகர்ந்தது. பரபரப்பான கடைசி செட்டில் ஜோகோவிச் கடும் சவால் அளித்தாலும் துடிப்புடன் செயல்பட்ட அல்காரஸ் வெற்றிக்கனியை பறித்தார்.

4 மணி 42 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தார். இதன் மூலம் 'நம்பர் ஒன்' இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். 20 வயதான அல்காரஸ் வென்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2022-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனை வென்று இருந்தார்.

விம்பிள்டன் புல்தரை மைதானத்தில் ஜோகோவிச் தொடர்ச்சியாக 34 வெற்றிகளை பெற்றிருந்தார். அவரது வீறுநடைக்கு அல்காரஸ் முடிவு கட்டினார். அத்துடன் விம்பிள்டனை 8-வது முறையாக சொந்தமாக்கி, ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய எடுத்த அவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. வாகை சூடிய அல்காரசுக்கு ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory