» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிஎஸ்கே அணியின் வெற்றி 3 ரன்னில் பறிபோனது கேப்டன் தோனி விளக்கம்!

வியாழன் 13, ஏப்ரல் 2023 9:59:24 AM (IST)



ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 52 ரன்கள் விளாசிய நிலையில் மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜடேஜா பந்தில் போல் டானார். ஆகாஷ் சிங் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 22 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அசத்தினார். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய ஜடேஜா 21 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அஜிங்க்ய ரஹானே 19, ஷிவம் துபே 8 ரன்களில் வீழ்ந்தனர். 

மொயின் அலி 7 ரன்னில் ஆடம் ஸம்பா பந்தில் ஆட்டமிழந்தார். இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய அம்பதி ராயுடு ஒரு ரன்னில் யுவேந்திர சாஹல் பந்தில் நடையை கட்டினார். நிதானமாக விளையாடிய டேவன் கான்வே 38 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் வெளியேறினார். 16 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே அணி.

கேப்டன் தோனி, ஜடேஜா களத்தில் இருந்த நிலையில் சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 59 ரன்கள் தேவையாக இருந்தது. சாஹல் வீசிய 17வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆடம் ஸம்பா வீசிய அடுத்த ஓவரில் தோனி தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. கடைசி 2 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய 19வது ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க 19 ரன்கள் விளாசப்பட்டன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரை வீசிய சந்தீப் சர்மா தொடர்ச்சியாக இரு வைடுகளை வீசினார். தொடர்ந்து வீசப்பட்ட முதல் பந்தில் ரன் சேர்க்காத தோனி அடுத்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் மைதானமே அதிர்ந்தது. 4வது பந்தில் தோனி ஒரு ரன் சேர்த்தார். 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் 5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன் தேவையாக இருந்த நிலையில் தோனியால் ஒரு ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது.

20 ஓவர்களில் சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோனி 17 பந்தில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 32 ரன்களும், ஜடேஜா 15 பந்தில், 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

சிஎஸ்கேவுக்கு இது 2வது தோல்வியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அதன் பின்னர் லக்னோ, மும்பை அணிகளை வென்றிருந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5வது இடத்தில் தொடர்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இது 3வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில், சென்னை அணி கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது: "மைதானம் பெரிய அளவில் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை. ராஜஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணம். பேட்டர்கள்தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். சென்னை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். கேப்டனாக 200வது போட்டி போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அணிக்கு பங்களிப்பதுதான் முக்கியம்" என்று டோனி தெரிவித்தார்

தோனி 200: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எம்எஸ் தோனி. சேப்பாக்கத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல் சாதனையை எட்டினார் தோனி.

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் சிஎஸ்கே அணிக்காக தோனி கேப்டனாக களமிறங்கிய 200-வது போட்டியாகும். இதையொட்டி அவருக்கு ஐசிசி, பிசிசிஐ மற்றும் டிஎன்சிஏ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் நினைவுப் பரிசு வழங்கினார். 

மொயின் அலி மோசம்: ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே ஆல்ரவுண்டரான மொயின் அலி பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டார். தீக்சனா பந்தில் படிக்கல் 14 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மொயின் அலி தவறவிட்டார். தொடர்ந்து அஸ்வின் ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னதாக கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டார். அஸ்வின் 10 ரன்னில் இருந்த போது ரன் அவுட் செய்யும் எளிதான வாய்ப்பையும் மொயின் அலி தவறவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory