» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கடைசி ஓவரில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் : கொல்கத்தா அணி த்ரில் வெற்றி!

திங்கள் 10, ஏப்ரல் 2023 10:37:59 AM (IST)



குஜராத் அணிக்கு எதிரான டி-20 போட்டியில், கடைசி ஓவரில் ரிங்கு சிங்  5 சிக்ஸர் விளாசியதில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று மாலை 13-வது லீக் ஆட்டம் குஜராத், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களைக் குவித்தது. ரித்திமான் சாஹா 17, ஷுப்மன் கில் 39, அபிநவ் மனோகர் 14 ரன்கள் எடுத்தனர். சாய் சுதர்ஷன் அபாரமாக விளையாடி 53 ரன்களைக் குவித்தார். 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3, சுயாஷ் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் 15, என்.ஜெகதீசன் 6 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயரும், கேப்டன் நிதிஷ் ராணாவும் அபாரமாக விளையாடினர். நிதிஷ் ராணா 29 பந்துகளில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் வீழ்ந்தார்.

15.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அப்போது 17-வது ஓவரை வீச வந்த கேப்டன் ரஷித் கான் முதல் 3 பந்துகளில் ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரது விக்கெட்களைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் அந்த அணி 155 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங்கும், உமேஷ் யாதவும் அபாரமாக விளையாடினர். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த 5 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரிங்கு சிங். இதனால் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் வீசினார். முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை புல்டாசாக எதிர்கொண்ட ரிங்கு சிங் அதை சிக்சருக்கு துரத்தினார். தொடர்ந்து மேலும் இரு புல்டாஸ்களை சிக்சருக்கு தெறிக்க விட்டார். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்ததால் பதற்றம் தொற்றியது. கேப்டனும், சக வீரர்களும் யாஷ் தயாளுக்கு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிறகு 5-வது பந்தை யாஷ் தயாள் 'ஷாட்பிட்ச்'சாக வீசினார். அதை அலாக்காக சிக்சருக்கு ஓடவிட்ட ரிங்கு சிங், கடைசி பந்தையும் இதே போல் சிக்சருக்கு தூக்கியடித்து நம்ப முடியாத ஒரு முடிவை கொண்டு வந்தார். இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்ட போது, அதை 5 சிக்சருடன் வெற்றிகரமாக எட்டிப்பிடித்தது ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிக்கு கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory