» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

குச்சி மிட்டாய் அளவுக்குக் கூட பயனில்லாத வேளாண் பட்ஜெட்! - கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:10:07 PM (IST)

தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும், இது விவசாயிகளுக்குக் குச்சி மிட்டாய் அளவுக்குக் கூட பயனில்லாத பட்ஜெட் என்றும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ. வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள்: கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வேட்டையாட அனுமதிப்பதே முழுமையான தீர்வாகும். ஆனால், அரசு அறிவித்துள்ள பன்றி விரட்டி மருந்து ஏற்கனவே 2 ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள ஒன்றுதான். மழ பெய்தால் உடனடியாக வீரியமிழக்கும் இந்த மருந்தால் 5 மாத காலப் பயிர்களைப் பாதுகாக்க முடியாது.

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மக்காச்சோள உற்பத்திப் பயிற்சி அளிக்க ₹36 கோடி ஒதுக்குவது வீண் விரையமாகும். பயிற்சிக்கு நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக, முன்னணி நிறுவனங்களின் தரமான வீரிய ஒட்டு ரக விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானியத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் 17,000-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ள நிலையில், மாநிலம் முழுமைக்கும் சேர்த்து பயிர்க்காப்பீட்டுக்கு ₹648 கோடி ஒதுக்கியிருப்பது மிகவும் சொற்பமானது. தூத்துக்குடி மாவட்டத்தின் இழப்பீட்டுத் தேவைக்கே ₹200 கோடி தேவைப்படும் நிலையில், இத்தொகை போதுமானதாக இல்லை.

விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பகுதியில் வெங்காயம், மிளகாய், நாட்டுக்கொத்தமல்லி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயச் சேமிப்புச் செட் அமைக்க 1 மெட்ரிக் டன்னுக்கு வழங்கப்படும் ₹3,500 மானியத்தை ₹10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு மீண்டும் நிராகரித்து முந்தைய நடைமுறையையே அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அரசு வழங்கும் கொத்தமல்லி விதைகள் கீரைக்கு மட்டுமே பயன்படுகின்றன. இப்பகுதியில் தானியத்திற்காகப் பயிரிடப்படுவதால், அரசு வழங்கும் விதைகளைப் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, நாட்டு ரகக் கொத்தமல்லி விதைகளை மானியத்தில் வழங்குவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

சிறுதானிய இயக்கத்திற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாதது உட்பட பல்வேறு காரணங்களால், இந்த வேளாண் பட்ஜெட்டால் கரிசல் பூமி விவசாயிகளுக்கு எந்தவொரு உண்மையான பயனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory