» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் பிரதமர் மோடி பிரமாண்ட வாகன பேரணி : பொதுமக்கள் மலர்கள் தூவி வரவேற்பு

செவ்வாய் 19, மார்ச் 2024 8:22:00 AM (IST)


கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் மலர்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா, மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதமர் மோடி, தமிழகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார். மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர், நெல்லையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழகத்தை ஆளும் தி.மு.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தொடர்ந்து சென்னை மற்றும் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். மிகக்குறுகிய காலத்தில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு 3 முறை வந்தது தமிழக பா.ஜனதாவினரை உற்சாகப்படுத்தியது.

இந்தநிலையில் 4-வது முறையாக பிரதமர் மோடி தமிழகத்துக்கு நேற்று வந்தார். முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்த அவர், கர்நாடக மாநிலத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரதமர் மோடி, சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு கோவை வந்தார். அங்கு அவரை மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் கோவை சாய்பாபா காலனிக்கு பிரதமர் மோடி வந்தார்.

பிரதமரின் வருகையையொட்டி பா.ஜனதா சார்பில் ஆங்காங்கே பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வழி நெடுகிலும் திரண்டு நின்ற பொதுமக்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தபடி சாய்பாபா காலனிக்கு பிரதமர் மோடி வந்தார். மாலை 6.10 மணிக்கு சாய்பாபா காலனியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த திறந்த காரில் பிரதமர் மோடி ஏறினார். அவருடன் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் அந்த வாகனத்தில் ஏறினர்.

இதையடுத்து பிரதமரின் பிரமாண்ட வாகன பேரணி, அங்கிருந்து ஆர்.எஸ்.புரம் நோக்கி புறப்பட்டது. சாய்பாபா காலனி போலீஸ் நிலையம், வடகோவை மேம்பாலம், சென்டிரல் தியேட்டர், சிந்தாமணி ரவுண்டானா, காமராஜபுரம் சிக்னல் வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்தை வந்து சேர்ந்தது. இந்த பிரமாண்ட பேரணி சுமார் 2.5 கி.மீ. தொலைவு வரை நடைபெற்றது. பிரதமர் சென்ற வழியெங்கிலும், சாலைகளில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்றனர். அவர்கள் மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் பிரதமர் மோடி, 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரத மாதா உருவப்படத்துக்கு மலர்களை தூவி வணங்கிய அவர், பின்னர் குண்டு வெடிப்பில் பலியானோரின் உருவப்படங்களுக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். 


பிரமாண்ட வாகன பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு செல்கிறார். இதையடுத்து இன்று மாலை சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory