» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தல் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

திங்கள் 18, மார்ச் 2024 3:54:40 PM (IST)



மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக தலைமை முன்னதாக இறுதி செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முழுவதுமாக இன்று இறுதியாகியுள்ளது.

காங்கிரஸ்

திருவள்ளூர்(தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் மாணிக்கம் தாகூரும், கன்னியாகுமரியில் விஜய் வசந்தும் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி மற்றும் ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக இந்த முறை மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள்

இந்த முறையும் விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் தனித் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன் களமிறங்குகிறார். திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்.

கடந்த முறை மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட கோவை தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக களம் காண்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட்

நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுப்பராயன் திருப்பூரிலும், வை. செல்வராஜு நாகையிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

மதிமுகவுக்கு ஈரோடு தொகுதிக்கு பதிலாக இந்த முறை திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் திமுக வேட்பாளர் நேரடியாக களமிறங்குகிறார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி

கொமதேகவுக்கு நாமக்கல்லும், இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம்

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தூத்துக்குடியில் கனிமொழி, வடசென்னை கலாநிதி வீராசாமி, மத்திய சென்னையில் தயாநிதிமாறன், நீலகிரியில் ஆ. ராசா உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்கும் விதமாக கோவை, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளை கூட்டணியிடம் இருந்து பெற்று திமுகவே நேரடியாக களம் காண்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory