» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாலிபர் கொலை; போலீஸ் ஏட்டுக்கு வெட்டு: சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள் அட்டகாசம்!

சனி 9, மார்ச் 2024 8:35:07 AM (IST)

நெல்லை அருகே தொழிலாளியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிய ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செட்டிகுளம் உடையநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் மகன் கருப்பசாமி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் நெல்லை அருகே வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளி சுடலை கோவில் அருகில் பாலம் அமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருந்தார்

அப்போது அந்த வழியாக முக்கூடல் அருகே தென்திருப்புவனத்தை சேர்ந்த காளி மகன் பேச்சிதுரை (24), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (23) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த கார் கண்ணாடிைய உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட கருப்பசாமியை பேச்சிதுரை, சந்துரு ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் பேச்சிதுரை, சந்துரு ஆகிய 2 பேரும் சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மூலச்சி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகவேல் மகன் வெங்கடேசையும் (23) அரிவாளால் வெட்டி விட்டு, முக்கூடல் ரோட்டில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தப்பி சென்ற 2 பேரையும் பின்தொடர்ந்து சென்றனர்.

இதற்கிடையே முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் சென்ற அரசு பஸ்சை அவர்கள் வழிமறித்து அரிவாளால் பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதில் போலீஸ் ஏட்டு செந்தில்குமாரின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பேச்சிதுரையின் வலது காலில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்தார். உடனே 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பேச்சிதுரை மற்றும் சந்துரு ஆகியோரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரவுடிகள் 2 பேர் மீதும் வீரவநல்லூர் போலீசார் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 15 பிரிவுகளில் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, பேச்சிதுரை மீது கடந்த 2021-ம் ஆண்டு முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அதேபோல் முன்னீர்பள்ளம், வீரவநல்லூர், முக்கூடல், பேட்டை காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. 

இவரை போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் சந்துரு மீது கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன. அவரை கடந்த 2023-ம் ஆண்டு முதல் ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கில் பேச்சிதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பேச்சிதுரை சிறையில் இருந்து வெளியே வந்தார். அதற்குள் அவர், கூட்டாளியுடன் சேர்ந்து தொழிலாளியை வெட்டிக்கொலை செய்து அட்டகாசம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


மக்கள் கருத்து

actionMar 11, 2024 - 04:10:38 AM | Posted IP 172.7*****

bury these thugs alive.

மக்கள்Mar 9, 2024 - 10:21:55 AM | Posted IP 162.1*****

எதுக்கு வெளிய விடணும் ? என்கவுன்ட்டர் செய்து முடிக்க வேண்டியது தானே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory