» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் அரசு சித்தா கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக தர்ணா போராட்டம்!

வியாழன் 7, மார்ச் 2024 12:33:28 PM (IST)



நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் வளர்ச்சிக்காக கடந்த 2016-ம் ஆண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இடப் பற்றாக்குறையால் வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பதிலாக அப்போது இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டது. 

இந்நிலையில் அந்த ஆண்டிலேயே கல்லூரிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என்றும், கல்லூரி வளர்ச்சிக்கான நிதி வீணடிக்கப்படுவதாகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் எதிர்கால நலனுக்காக தகுதி வாய்ந்த புதிய இடத்தை தேர்வு செய்து விதிகளின்படி புதிய கல்லூரியை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் சுமார் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது அரசு சார்பில் கல்லூரியின் பாழடைந்த வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவமனை சார்ந்த கட்டிடங்களை கட்ட ரூ.40 கோடி அறிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பன உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று 3-வது நாளாக மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பழைய சித்த மருத்துவ விதிகளின்படி குறைந்த பட்சம் இந்த கல்லூரிக்கு 25 ஏக்கர் இடம் வேண்டும். 

ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கும் போது இடப்பற்றாக்குறையால் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிகிறது. எனவே கூடுதலாக சித்த மருத்துவ கல்லூரிக்கு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory