» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பவானி ஆற்றில் உயிரிழப்பு குறித்து வீடியோ: நடிகர் பாக்யராஜ் மீது போலீசில் புகார்

வெள்ளி 16, பிப்ரவரி 2024 8:22:22 AM (IST)

பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்பு குறித்து வீடியோ வெளியிட்டு வதந்தியை பரப்பியதாக நடிகர் பாக்யராஜ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கோவை அருகே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் இருக்கும் சிலர் காலை இழுத்து சென்று மூழ்கடிக்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட செயல் என தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மாவட்ட எஸ்பி  பத்ரி நாராயணன், நடிகர் பாக்யராஜ் புகார் ஆதாரமற்றது. இது போன்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என கேட்டு கொண்டார். 

இந்தநிலையில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்க செயலாளர் யு.மஸ்தான் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம். அப்படி குளிக்கும்போது ஒரு சிலர் ஆழமான பகுதிக்கு சென்று விடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நடிகர் பாக்யராஜ் குறிப்பிட்டது போல திட்டமிட்டு சம்பவம் நடந்ததாக போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. அவர் குறிப்பிட்டது போல அந்த ஆற்றில் அப்படி செய்யவும் முடியாது. அவரின் கருத்து, மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மீது பிறருக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களில் சிலர், பிரேதத்தை கண்டறிந்து தரும் காசுக்காக கொலை செய்கிறார்கள் என்று அவதூறு பரப்புவதாகவும் இருக்கிறது. 

இந்த பகுதியில் தற்செயலாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பவானி ஆற்றில் நடைபெறும் பல்வேறு மீட்பு பணிகளில் அந்த பகுதி மக்கள் அரசுக்கு உதவியாக இருக்கிறார்கள். இனி அவர்களை இது போன்ற பணிகளில் ஈடுபடாதவாறு தடுக்கும் வகையிலும் பாக்யராஜ் பேச்சு இருக்கிறது. எனவே வதந்தியை பரப்பிய நடிகர் பாக்யராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory