» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:03:10 PM (IST)

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 15 லட்சம் பெண்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 5ஆம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் 16 லட்சம் விவசாயிகளின் ரூ.12 ஆயிரம் கோடி விவசாயக் கடனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

அதற்கான ரசீதும் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை விதி எண்‌110ன்‌ கீழ்‌ அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

"இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறு தொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவிக்குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரைத் துடைக்கத் தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதுபோன்று கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, ‘தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் ரத்து செய்யப்படும். விவசாயிகள் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

tamilanFeb 26, 2021 - 07:41:49 PM | Posted IP 108.1*****

இந்த கடனையெல்லாம் யார் தலையில் கட்டப்போகிறார்கள் .ஏற்கனவே நாலரை லட்சம் கோடி கடனில் உள்ளது . இனி விலை வாசி கடினமாக உயரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் ஆட்சியாளர்கள் உள்ளனர் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory