» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியின் வரலாறு தெரியாமல் பேசுகிறார்: அமைச்சர் நிர்மல் குமாருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி கண்டனம்!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 10:52:32 AM (IST)

தூத்துக்குடியின் வரலாறோ, தெருக்களின் விவரமோ தெரியாமல் அமைச்சர் நிர்மல் குமார் பேசி வருவதாகத் மாநகராட்சி மேயரும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மாநகராட்சி மேயர் வெள்ளப் பாதிப்பின் போது சேலம் மாநாட்டிற்குச் சென்றுவிட்டதாகவும், மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் எத்தனை தெருக்கள், எத்தனை குறுக்குச் சந்துகள் உள்ளன என்று கூடத் தெரியாத அமைச்சருக்கு மாநகராட்சியைப் பற்றிப் பேசத் தகுதியில்லை.

100 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு 15 நாட்களுக்கு மேல் தூத்துக்குடியிலேயே தங்கி முகாமிட்டுப் பணிகளைச் சீரமைத்தார். பத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டதால் ஒரு மாதத்திற்குள் நிலைமை சீரடைந்தது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதாரண மழைக்கே 6 மாதங்கள் வரை வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வரலாற்றை அமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் 4,000 சாலைகள் மற்றும் 53 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்களுக்காக மட்டும் 3 பிரத்யேக மகளிர் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட படிப்பகங்களில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கிப் பணி மற்றும் அரசுப் பணிகளுக்குச் சென்றுள்ளனர். 7 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கோடைகாலத்தில் இருந்த குடிநீர்ப் தட்டுப்பாடு நீக்கப்பட்டு, தற்போது 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேடையில் உள்ளவர்கள் சொல்லும் தவறான தகவல்களைப் பேசாமல், அமைச்சர் மாநகராட்சியை நேரில் சுற்றிப் பார்த்தால் மக்களின் வளர்ச்சி புரியும். அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மின்சாரத் துறையிலேயே பல்வேறு குறைபாடுகள் உள்ளன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை முதலில் சரிசெய்ய வேண்டும்.

தங்களை நிரந்தரப் பணியாளராக அறிவிக்கக் கோரி மனு அளித்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மேலும், தெர்மல் நகர் அனல்மின் நிலையத்திலிருந்து கழிவுச் சாம்பல் கடலில் கலப்பதால் மீன்வளமும் உப்பளமும் பாதிக்கப்படுவதை முதலில் சரி செய்ய வேண்டும்.

எனது தந்தைக்கு 'முரட்டு பக்தன்' என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று கூட அமைச்சருக்குத் தெரியவில்லை. 7 வயது முதல் ஒரே இயக்கத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காகவும் தூத்துக்குடி மாவட்டத்திற்காகவும் பாடுபட்டதால் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவருக்கு வழங்கிய பட்டம்தான் அது. பல கட்சிகளுக்குத் தாவி வந்த நிர்மல் குமாருக்கு அரசியல் வரலாறு பற்றித் தெரியாது என மேயர் ஜெகன் பெரியசாமி அந்த அறிக்கையில் சாடியுள்ளார்.


மக்கள் கருத்து

GW DasAug 3, 2026 - 07:56:39 PM | Posted IP 162.1*****

The Thoothukudi city has been developed and modernised rapidly under Mayor Jegan Periyasamy. People who are living the city for three decades will know that Jegan Periyasamy has transformed the city to a new level with adewuate water supply, roads and infrastructures, platforms and swift water evacuation measures during flood seasons. Residents from far off places will not know, how the city roads were in bad shape during AIADMK's 10 years rule.

Antony Paul Raj PAug 2, 2026 - 01:10:41 PM | Posted IP 162.1*****

After ruling for50+ years, Thoothukudi in disaster.... No proper road, fully Encroched Toll Gate just outside City limits Last 5 years only 1 industry and zero MSME... DMK and ADMK Failed Thoothukudi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory