» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் : மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சனி 20, ஜூன் 2026 11:40:05 AM (IST)



சாயர்புரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, சாயர்புரம் பொறியியல் கல்லூரி முதல் காமராஜர் நகர் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காகச் சாலையின் இரு ஓரங்களும் ஆழமாகத் தோண்டப்பட்டுப் ஆரம்பக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், என்ன காரணத்தினாலோ கடந்த ஒரு மாத காலமாக இந்தச் சாலைப் பணிகள் முழுமையாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், இச்சாலை வழியாகப் பயணிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, போப் கல்லூரி, போப் மேல்நிலைப்பள்ளி, போப் பொறியியல் கல்லூரி, தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விசாகா பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் பேருந்துகளும், மாணவ-மாணவிகளும் தினமும் இந்த வழித்தடத்தையே நம்பியுள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை, சாயர்புரம், தேரி, மற்றும் தூத்துக்குடி விமான நிலைய சாலைப் பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய இணைப்புச் சாலையாக இது இருப்பதால், எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. சாலை ஓரங்கள் தோண்டப்பட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதால், வாகனங்கள் செல்லும் போது சாலை முழுவதும் புழுதிப் படலம் பறந்து வாகன ஓட்டிகளுக்குக் கண் எரிச்சல் மற்றும் கடுமையான சுவாசச் சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, மாணவர்களின் கல்விப் பயணம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள சாயர்புரம் பொறியியல் கல்லூரி முதல் காமராஜர் நகர் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் நீண்ட நாள் சிரமங்களைப் போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory