» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்படுமா? முதல்வருக்கு கோரிக்கை

வியாழன் 11, ஜூன் 2026 10:55:22 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் அருகே அமைந்துள்ள சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட, 100 கோடி மதிப்புள்ள அரசு தரிசு நிலத்தை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அருகே அமைந்துள்ள சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட, 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு, அப்பகுதி இளைஞர்களுக்கான அரசு விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்சம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள மனுவில், சம்பந்தப்பட்ட நிலங்கள் செட்டில்மென்ட் பதிவேடு மற்றும் மறுஅளவீட்டு பதிவுகளில் "சர்க்கார் தரிசு” என பதிவாகியிருப்பது மாவட்ட வருவாய் அலுவலரின் ஆணையிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நில வகைமாற்றத்திற்கு அடிப்படையான டி.சி.1/93 கோப்பு மற்றும் மூல ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை என்றும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோர் பட்டாக்களை ரத்து செய்ய பரிந்துரைத்திருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 02.03.2026 அன்று "அடுத்தகட்ட விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அதிகாரப்பூர்வ பதில் அளிக்கப்பட்ட பின்னரும், மூன்றாவது விசாரணை நடத்தப்படாமல் 12.03.2026 அன்று இறுதி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு பதிவுகளில் அரசு தரிசு நிலம் என இடம்பெற்றுள்ள நிலம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டதா? வகைமாற்றத்திற்கான மூல ஆவணங்கள் இல்லாத நிலையில் எவ்வாறு இறுதி முடிவு எடுக்கப்பட்டது? கீழமை அதிகாரிகளின் பட்டா ரத்து பரிந்துரைகள் ஏன் ஏற்கப்படவில்லை? என்பன குறித்து வெளிப்படையான விளக்கம் தேவை.”
என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றம் வலியுறுத்திய இயற்கை நீதி கோட்பாடு (Principles of Natural Justice), காரணப்பூர்வமான ஆணை (Speaking Order) மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973 Rule 20-ன் அடிப்படையில் இவ்விவகாரம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேர்வைக்காரன்மடம் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு தரமான அரசு விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், மீட்கப்படவுள்ள 32 ஏக்கர் அரசு நிலத்தில் நவீன விளையாட்டு வளாகம் அமைக்க வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக இந்த நிலத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, நிலத்தின் உண்மை நிலையை ஆய்வு செய்து, அரசு நிலம் என்றால் அதை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory