» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜமாபந்தியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

புதன் 10, ஜூன் 2026 8:34:53 AM (IST)

திருச்செந்தூர் ஜமாபந்தியில் தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொதுமக்கள் தங்களின் நில ஆவணங்களைச் சரிபார்த்துப் பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா போன்ற தேவைகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. 

திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 2-ஆம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூர் முத்துமாலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளரான சுடலைமணி (48) என்பவர், திருச்செந்தூர் புளியடி அம்மன் கோவில் தெருவில் தமக்குச் சொந்தமாக உள்ள நிலத்திற்குத் தனிப்பட்டா வழங்கக் கோரி நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் முறைப்படி மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இம்மனுவை ஆய்வு செய்த கீழ திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலரான சரவணன் (34), மனுதாரரான சுடலைமணியைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவருக்குத் தனிப்பட்டா வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சுடலைமணி, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் தெரிவித்தார்.

சுடலைமணியின் புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரம் நோட்டுகளை அவரிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி, சுடலைமணி அந்தப் பணத்துடன் திருச்செந்தூர் தாலுகா அலுவலக வளாகத்திற்குச் சென்றார்.

அப்போது தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், சுடலைமணியிடம் இருந்து அந்த ரூ. 10 ஆயிரம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் பணத்தை வாங்கிய அடுத்த கணமே, அங்கு மாறுவேடத்தில் ரகசியமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால், இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனைக் கையும் களவுமாக கைது செய்தனர். தாலுகா அலுவலக வளாகத்திலேயே அரசு அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory